இன்று எமது தளத்துக்கு லண்டனிலிருந்து ஓர் மின் அஞ்சல் வந்தது. ஈ.என்.டி.எல்.எப். க்கு ஓர் வேண்டுகோள் என்ற தலைப்பில் அது இருந்தது. இதை அனுப்பியவரை எமக்குத் தெரியாது. ஆயினும் அவரது கோரிக்கை நியாயமானதாக இருப்பதால் அதனைப் பிரசுரித்துள்ளோம்.
கடந்த பத்து நாள்களாக விடுதலைப் புலி ஆதரவு இணைய தளத்தில் வெளிவந்த ஓர் விசமக் கட்டுரை ஒன்றினைத் தொடர்ந்து தங்களது தளங்கள் மூலமாக எதிர் விமர்சனக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டுள்ளன.
நான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய பதவி வகித்துள்ளேன். தங்கள் இயக்கத்தின் மீது நல்மதிப்பு வைத்துள்ளேன். எங்கள் தலைவர் மேதகு வே. புpரபாகரன் அவர்கள் தங்களது இயக்கமான ஈ.என்.டி.எல்.எப். ஐ அழித்து விடுங்கள் என்றும் சொன்னதில்லை.
நான் 1994ம் ஆண்டில் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தேன். சில வேளை நான் இணைவதற்கு முன்னாள் அவர் அப்படி சொல்லியிருப்பாரோ என்பது எனக்குத் தெரியாது.
1995ஆம் ஆண்டு தங்களது இயக்கமும் எங்களது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அக்கரையான் குளத்தில் பேச்சுவார்த்தை நடத்திய போது நான் அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்தேன்.
யாழ்ப்பாணம் சிங்கள இராணுவத்திடம் பறிபோனதும் அதனை மீட்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் உங்கள் இயக்கம் பேச்சுவார்த்தை நடத்தியதை நான் அறிவேன். இப்போது இருக்கும் எங்கள் இயக்க அங்கத்தினருக்கு இவை பற்றித் தெரியவாய்ப்பில்லை.
2008,2009 ஆகிய ஆண்டுகளில் வன்னிப் பகுதி பறிபோய்விடக்கூடாது என்பதில் தாங்கள் எடுத்த முயற்சிகள் வன்னியிலிருந்த எங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. இந்தியாவுடனும், எங்களது தலைமையுடனும் தொடர்புகொண்டு யுத்தத்தை நிறுத்த எடுக்கபட்ட முயற்சிகளை நாங்கள் அறிவோம். இவை பற்றி இன்று வலைத் தளங்களை நடத்துபவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புக் குறைவு.
இது போக, முன்னர் லங்காசிறி, தமிழ் வின் போன்ற இணைய தளங்கள் எங்களது இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகச் செயல்பட்டன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் 2009 மே மாதத்துக்குப் பின்னர் அந்தத் தளங்கள் இலங்கை அரசின் கைக்கூலிகளின் ஊடுருவலுக்கு உள்ளாகி உள்ளது. எனவே எங்கள் இயக்கத்துக்கும் உங்கள் இயக்கத்துக்குமிடையில் சண்டையை ஏற்படுத்தி விடும் செயலை இந்தத் தளங்கள் செய்கின்றன.
ஆதலால் அவர்களின் சதிச் செயலுக்கு நாம் ஆளாகி விடக்கூடாது என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இன உணர்வு, விடுதலை இவை இரண்டையும் சிதைக்கும் வேலையை இலங்கை உளவுத்துறை செய்து வருகிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் அவர்களது கை ஓங்கி உள்ளது. இந்தத் தளங்களில் வரும் விசமத்தனமாக செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்கள் தலைவர்களை விமர்சிக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் இனத்தை மீட்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். காலம் கடந்தாலும் இதுதான் உண்மை.
எங்கள் இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பல கூறுகளாகப் பிரிந்துள்ளன. இலங்கை அரசும் ஒரு பிரிவைக் கையாள்கிறது. எனவே எதிர்காலத்தில் எம் இனம் விடியலை அடைய தமிழர்கள் நாம் ஒன்றுபட வேண்டும். இக்கடிதத்தை தங்களது தளத்தில் பிரசுரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மைந்தன்
courtesy:endlf.com
|