பாலித கோஹன்னவின் கனடா பயணம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் ஒத்திவைப்பு!
March 09,2010
சிறிலங்கா அரசாங்கம் புரிந்த போர்க் குற்றங்கள் தொடர்பான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக ஏற்கனவே திட்டமிட்டடிருந்த ரொறன்ரோவிற்கான தனது பயணத்தினை ஐ.நா.விற்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கோகன்ன [Dr. Palitha Kohona] இடை நிறுத்தியுள்ளார்.
எதிர்வரும் புதனன்று ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் சர்வதேசக் கற்கைகளுக்கான Munk Centre மையத்தில் பாலித கோஹன்ன விரிவுரை ஆற்ற இருந்தார்.
ஐ.நா.விற்கான நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் கோஹன்ன சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியிருந்தார்.
தகுந்த ‘பாதுகாப்பு மதிப்பீடு’ ஒன்றைச் செய்வதற்காகவே கோஹன்னவின் திட்டமிட்ட விரிவுரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் Magaret McKone தெரிவித்தார்.
கோஹன்ன, போர் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்களைப் புரிந்த நாடு ஒன்றின் பிரதிநிதி எனக் கூறி பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு தொகுதியினர் அவரது விஜயத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவக்கிறார்கள்.
அவருக்கு கனடாவிற்கான விசா நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அவர் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
சிறிலங்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவார் எனக் கூறி, கனேடியப் பாராளுமன்ற உறுப்பினரான பொப் றே கடந்த வருடம் சிறிலங்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டமை மற்றும் சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்படுவது போன்ற விடயங்களையும் மாணவர்கள் எழுப்பினார்கள்.
இவ்வாறான ஒரு விடயம் தொடர்பாகத் தனக்குத் தெரியாது எனக் கூறி வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லகம கருத்துக் கூற மறுத்து விட்டார்.