விடுதலைப் புலிகளின் அழிவுக்கு முதல் காரணம் வைகோவும் சீமானும்தான்! இந்தியாவை விடுதலைப்புலிகளின் நிரந்தர எதிரியாக மாற்றிய பெருமை வைகோ, சீமான், பழ நெடுமாறன், இராமதாஸ், சுப வீரபாண்டியன், தன்னிச்சையாக உண்ணாவிரதமிருந்த திருமாவளவன் போன்றவர்களையேச் சாரும். விடுதலைப் புலிகள் இந்தியாவிடம் இறங்கி வரும் சூழ்நிலையில், இவர்களின் இந்திய எதிர்ப்பு வீராவேசப் பேச்சால், எப்படியும் இவர்களின் போராட்டத்தில் இந்தியா பணியும் என்று நினைத்து தனது முடிவை மாற்றிய பிரபாகரன் இறுதியில் தனது இயக்கத்துக்கும் தனக்கும் தனது கொள்கைக்கும் முடிவுரை எழுதினார்.
தா.பாண்டியன் அவர்கள் தமிழகத்தில் ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தை புத்துயிர் கொடுக்கும் போது, நிச்சயமாக தமிழக மக்கள் ஆதரவு 1983ஆம் ஆண்டை நினைவுப்படுத்தின. பொதுவாக விடுதலைப் புலிகளை வைகோ, இராமதாஸ், பழ நெடுமாறன், திரைப்படத் துறையில் வேலையில்லாத சில நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்கள் தவிர தமிழ் நாட்டில் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தா. பாண்டியன் அவர்களும் வி.புலிகளின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடியவர் அல்ல. அப்படியிருந்தும் ஈழத் தமிழர்களின் மீதான தாக்குதலை மையப்படுத்தி போராட்டத்தை ஆரம்பித்ததால் தமிழக பொதுமக்களும் விடுதலைப்புலிகளை மறந்து, இராஜீவ்காந்தியின் படுகொலையை மறந்து ஈழத் தமிழர்களுக்காக போராட்டத்தை ஆரம்பித்தனர்.
தமிழக காங்கிரசாரும் உத்வேகத்துடன் போராட்டத்தில் இணைந்துகொண்டனர். தமிழகமே ஒன்றினைந்து போராட்டத்தை முன்னெடுத்தது. இந்திய அரசு நிலைகுலைந்து போனது உண்மை. இந்திய அரசு உடனே சூழ்நிலையைப் புரிந்துகொண்டு தமிழக முதல்வரை சந்திக்க தூதுவர்களை அனுப்பியது. அப்படி ஒன்றிணைந்து நடத்தியப் போராட்டத்தை பதவிக்காக, அரசியல் கூட்டணிக்காக, ஓட்டுக்காக மற்றும் பெயருக்காக தங்களது சுயநலத்திற்காக அரசியல் கட்சிகள் பிரிந்து தனித்தனியாக போராட்டத்தை மேற்கொண்டன. இதனால் தமிழக தமிழீழ ஆதரவுப் போராட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது.
தமிழக தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். அதில் தமிழக காங்கிரசாரும் அடக்கம். மேடையில் பிரபாகரனை வானூயர வாழ்த்திப் பேசினாலும் காங்கிரசார் ஒன்றும் பேசவில்லை. அவர்களும் ஈழத்தில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும், அரசியல் தீர்வு வேண்டும் என்றுதான் பேசினார்கள். எப்போது வைகோவும் சீமானும் ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்திப் பேசினார்களோ அன்றே தமிழீழ ஆதரவுப் போராட்டத்தில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. தமிழக காங்கிரசார் விலகிக்கொண்டார்கள். அதே நிலையில் ராஜீவின் மரணத்தை மறந்து ஈழப் பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழக மக்களுக்கு ராஜீவின் மரணத்தை நினைவுப்படுத்தியதால் பொதுமக்களும் விலகிக்கொண்டார்கள். தமிழீழ ஆதரவு போராட்டத்திற்கு முதல் அடி இதுதான்!
ஆனால், எப்போது வைகோ “தமிழ்நாடு தனிநாடாகும்” என்று சூழுரைத்தாரோ அன்றே அரைவாசி பொதுமக்களின் ஆதரவு முடிந்துவிட்டது. மீதமுள்ள கொஞ்சமுள்ள ஆதரவை சீமான் தமிழகத் தமிழர்களை வேசிமக்கள் என்று சொல்லி அதையும் கெடுத்தார். இது தமிழீழ ஆதரவு போராட்டத்திற்கு இரண்டாவது அடி!
இறுதியாக, தமிழக முதல்வர் கலைஞரின் தலைமையில் ஒன்றுபட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தால், அவர் தமிழினத் தலைவர் என்ற பதவிக்காக எதையும் செய்திருப்பார். நிச்சயமாக இந்தியா இலங்கைப் போரை நிறுத்தியிருக்கும் அல்லது மாற்றுவழி ஒன்றை இந்தியாவே ஏற்படுத்தியிருக்கும். இவற்றுக்குப் பதிலாக புலிகளின் கடந்தகால வரலாற்றை மறந்து புலிகளால் சுடப்பட்ட அனைவருமே (ராஜீவ்காந்தி உள்பட) தமிழினத் துரோகிகள் என்று பகிரங்கச் சான்று வழங்கப் புறப்பட்டார் திரைப்பட இயக்குநர் சீமான். இது தமிழீழ ஆதரவு போராட்டத்திற்கு மூன்றாவது அடி!
மேலும், இந்திய அரசு திருகோணமலையை புலிகள் இழந்ததும் அவர்களை அழைத்தது, புலிகள் பதில் கூறவில்லை, மன்னாரை இழந்ததும் இந்திய அரசு புலிகளுக்கு அழைப்பு விடுத்தது. அவர்கள் பதில் கூறவில்லை. கிளிநொச்சியை இழந்ததும் மீண்டும் இந்தியா அழைப்பு விடுத்தது அதற்கும் புலிகள் பதில் கூறவில்லை. சர்வதேசம் தலையிடும் என்று கண்மூடித்தனமாக நம்பினர் புலிகள். இதனால் இந்தியா புலிகள் விடயத்தில் மௌனம் காத்தது. இதுதான் உண்மை.
இந்தியா விடயத்தில் புலிகள் தவறுகள் செய்திருந்தாலும், அதனை மறைத்து சாதுரியமாக உதவிகள் பெற வேண்டிய நேரத்தில், புலிகளின் தமிழக ஆதரவாளர்கள் தமிழகத்தின் வாக்குவங்கிகளைக் கவனத்தில் கொண்டு, வேண்டுமென்றே வீராவேசம் பேசி ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யக் காத்திருந்த இந்தியாவை புலிகளுக்கு நிரந்தர எதிரியாக்கினார்கள். இலங்கை விடயத்தில் இந்தியாவின் சம்மதம் இல்லாமல் சர்வதேசம் அறிக்கை மட்டுமே விட முடியும் என்பதனை புலிகள் அப்போது அறிந்திருக்க வில்லை. இது பிரபாகரனுக்கு விழுந்த மரண அடி!
ஆகவே, விடுதலைப் புலிகளின் அழிவுக்கு முதல் காரணம் தமிழக அரசியல் தலைவர்கள்தான். இரண்டாவது காரணம் பொதுமக்களை முன்னிறுத்திய போராட்டத்தினால் யுத்தநிறுத்தம் ஏற்பட்டால் பொதுமக்களோடு புலிகளும் பாதுகாக்கப்படுவார்கள் என்ற உண்மையை விளங்காமல், பொதுமக்களைக் காப்பாற்றும் கோரிக்கையை விடுத்து புலிக்கொடி ஏந்தி வி.புலிகளைக் காப்பாற்ற கோரிக்கை விடுத்த புலம்பெயர்ந்த தமிழர்கள். தாங்கள் தோல்வியடைந்து விடுவோம் என்று தெரிந்தும் தமது போராட்ட வியூகத்தை மாற்றாமல், பொதுமக்களை மனித கேடயமாக வைத்து தனது பயங்கரவாதத்தை உறுதி செய்த புலிகள் மூன்றாவது காரணம்.
புலிகளின் பயங்கரவாதத்தை முன்னிறுத்தி, பொதுமக்களைக் காப்பாற்ற தவறிய சர்வதேசம் நான்காவது காரணம். மேற்கூறிய காரணங்களை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி புலிகளுக்கு முடிவுரை எழுதி மோட்டுச் சிங்களவனை உலகின் அதிபுத்திசாலி சிங்களவனாக மாற்றிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஐந்தாவது காரணம். எப்படியிருப்பினும் தமிழீழப் போராட்டத்தின் தோல்விக்கும் புலிகளின் அழிவிற்கும் பொதுமக்களின் இழப்பிற்கும் தமிழக அரசியல் தலைவர்களே முழுமையான காரணமானவர்கள்.
தீப்பொறி!
|