தொடர்ச்சி..
1986ல் ரெலோ இயக்க அங்கத்தினரை புலிகள் இயக்கத்தினர் படுகொலை செய்தனர். சிங்கள இனத்தவர் நினைத்தும் கூட பார்க்க முடியாத அளவு படு பயங்கரமான வழி முறைகளில் அந்தத் தமிழ் இளைஞர்களைத் தமிழர்களாகிய புலிகள் கொன்றனர். இந்தப் படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு ஈழத் தமிழர்கள் மத்தியில் யாரும் இருக்க வில்லை. ஏனெனில் புலிகளின் ஆயுதங்களின் முன்நின்று நியாயம் கேட்டால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதனை எடுத்துரைத்த காலம் அது.
தமிழீழ விடுதலைக்கு தமிழர்களின் ஒற்றுமைதான் அவசியமானது. அந்த ஒற்றுமையை புலிகளே முன்நின்று ஆயுதங்களால் சிதைத்தனர். தமிழரை அழிக்கத் தமிழர்களே போதுமானவர்கள் என்று தெளிவு பெற்றது சிங்கள இனம். ஓவ்வொரு இயக்கங்களாக புலிகள் அழிக்கும் போது சிங்கள இனத்துக்கு பேரதிற்சியாக இருந்தது. “மோட்டுச் சிங்களவர் என்று கூறிவந்த தமிழர்கள் எங்களை விடவும் மடையர்களாக மாறிவருகின்றனர்” என்று ஆனந்தமடைந்தனர்.
1987ல் நடந்த “இந்திய-இலங்கை” அமைதி ஒப்பந்தத்தினை சிங்கள மக்கள் யாரும் ஏற்றுக்கொண்டதில்லை. தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா பயிற்சி அளித்தது, ஊக்குவித்தது என்பது உலகறிந்த உண்மை. இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசு இந்தியா மீது சுமத்தியபோது, இந்தியா அதையிட்டு கவலைகொள்ளவில்லை. பதிலாக அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தது. இப்படிப்பட்ட இந்தியா, ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்தி இலங்கைக்குள் வருவதை சிங்கள மக்கள் விரும்பவில்லை. ஏனெனில் 1983ஆம் ஆண்டு கலவரத்தை வன்மையாகக் கண்டித்தது இந்தியா. இதனைத் தொடர்ந்து தான் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவில் முகாம்கள் அமைத்து, பயிற்சி பெற இந்தியா அனுமதி அளித்தது. உதவிகளும் செய்தது. இதனால் சிங்கள மக்களுக்கு இந்தியா மீது வெறுப்பு ஏற்பட்டது.
வடமராட்சி பகுதியை சிங்கள இராணுவத் தளபதி கொப்பகடுவே தலைமையில் இராணுவம் கைப்பற்றிய வேளை இந்தியா அனுமதியின்றி வலுக்கட்டாயமாக தென்மராட்சிப் பகுதிக்குள் நுழைந்து விமானம் மூலமாக உணவுப் பொட்டலங்களைப் போட்டது. இப்படி விமானங்கள் நுழைந்த பின்னர்தான் இலங்கை அரசு இந்தியாவுக்கு கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எதிர்த்து ஏதாவது நடவடிக்கையில் இலங்கை அரசு இறங்கியிருந்தால் 1971ல் வங்காள தேசம் பிரிக்கப்பட்டது போன்று தமிழீழம் பிரிக்கப்பட்டிருக்கும்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பாரதப் பிரதமரை சிங்களச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியின் அடிப்பாகத்தால் அவரது தலையில் தாக்கினார். இந்தத் தாக்குதல் சிங்கள மக்களின் மனதின் வெளிப்பாடுதான். அந்தச் சிப்பாய் பின்நாளில் சிங்களவரின் கதாநாயகனாகச் சித்தரிக்கப்பட்டார்.
இந்தியாவை எதிர்க்காமல் வளைந்து கொடுத்து சிங்கள இனம் தனது விருப்பத்தை நிறைவேற்றியது. சர்வதேசமும் தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ந்து போனது அந்தத் தாக்குதலைக் கண்டு. தன்னிச்சையாக நடந்து கொள்ளும் ஓர் அரசாக இருந்தால் தாக்குதல் நடந்த அன்றைய தினமே இலங்கை முழுவதையும் அந்த நாடு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கும். ஆனால் இந்தியா அதனைச் செய்யவில்லை. பதிலுக்கு பொறுமை காத்தது. இந்திய இராணுவம் இலங்கை மீது படையெடுக்க தயாராகி பிரதமர் இராஜீவ் அவர்களிடம் அனுமதி கேட்டது. இராஜீவ் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டார்.
பிரதமர். இராஜீவ் அவர்கள் தாக்கப்பட்டச் சம்பவத்தை தமிழர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தமிழர்களது மூளை சிதைந்து போயிருந்தது. இன்னமும் அப்படித்தான் இருக்கிறது. புலிகளின் துப்பாக்கியால் சிதறடிக்கப்பட்ட மூளைகள் ஒருபக்கம் இருக்க தமிழினத்தின் சிக்கல்களை கையில் எடுத்து தீர்வு காணப் புறப்பட்ட எங்கள் தலைவர்களுக்கும் அப்போதே மூளை மங்கிப் போய்விட்டது.
1972ல் சிங்கள மக்கள் இலங்கைக்கான அரசமைப்பு முறையை மாற்றினர். அப்படி மாற்றிய போது அதனை எதிர்த்து ஊர் ஊராகச் சென்று கூட்டம் போட்டு பிரசாரங்கள் செய்தனர். தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி அவர்களது உணர்ச்சிகளைத் தூண்டினர் தமிழ்த் தலைவர்கள். எங்கள் இனத்தின் தலைவர்கள் அத்தனைபேரும் சட்டத்தரணிகள் ஆவர்.
ஆங்கிலேயர் இலங்கையை விட்டுச் சென்ற போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட அரசியல் சட்ட வரைமுறையின் 29வது பிரிவில் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு என்று சொல்லப்பட்ட அம்சமான பிரித்தானியாவின் பிரிவிக் கவுண்சிலை (Pசiஎல ஊழரnஉடை) அணுகும் வசதி செய்யப்பட்டிருந்தது. அதாவது இலங்கையில் ஓர் சிறுபான்மையினருக்கோ, அல்லது தனிப்பட்ட ஒருவருக்கோ நீதி கிடைக்க வில்லை என்றால் அவர்கள் பிரிட்டன் பிரிவிக் கவுண்சிலை அணுகலாம். இதுதான் அந்தச் சலுகை.
1948ல் சுதந்திரம் கிடைத்த வேளை எங்கள் தமிழினத் தலைவர்கள் பிரிட்டனிடம் கதைத்து எங்கள் பகுதியைத் தனிநாடாகப் பெற்றிருக்கலாம். முகம்மது அலி ஜின்னா பாக்கிஸ்தானை பிரித்துக் கொண்டு சென்றது போல் இவர்களும் செய்திருக்கலாம், மடத்தலைவர்களாக இருந்தனர் எங்கள் தலைவர்களும்.
எங்கள் இனத்தின் அன்றைய தலைவர்கள் அதி உயர்ந்த சட்டத் தரணிகள் என்பதால் சட்டத்தினாலேயே அனைத்தையும் சாதித்துவிடலாம் என்று திமிருடன் உயர் நீதி மன்றங்களில் கோலோச்சினர். 1972ல் அரசியலமைப்பு மாற்றப்பட்டதும் நீதிகேட்டு எந்தத் தலைவரும் பிரித்தானிய பிரிவிக் கவுண்சிலில் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. இலங்கை அரசாங்கம் தனது நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளில் தோல்விகண்டதும் பிரிவிக் கவுண்சிலில் மேல்முறையீடு செய்து அதில் வெற்றி கண்ட வரலாறு இவர்களுக்குத் தெரியும். எழுது வினைஞர் திரு. கோடீஸ்வரன் அவர்கள் சிங்கள மொழிச் சட்டத்தின் மூலம் தனது பதவியை இழக்க நேரிட்டதை எதிர்த்து பிரிவிக் கவுண்சிலில் வழக்குத் தொடுத்தார். இந்த வரலாறும் இவர்களுக்குத் தெரியும். பிரிவிக் கவுண்சிலை விடுங்கள், இலண்டன் உயர்நீதிமன்றத்தில் பிரித்தானியருக்கு எதிராக வழக்குத் தொடுத்து பிரிட்டன் மூலம் ஐ.நா.வுக்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்றிருக்கலாம். இவர்கள் எதுவும் செய்யவில்லை.
கடந்த 1998ஆம் ஆண்டு ரி.யு.எல்.எப். தலைவராக இருந்த உயர்திரு. எம். சிவ சிதம்பரம் அவர்களிடத்து ஒரு கேள்வியினைக் கேட்டோம். 1972ல். இலங்கையைக் குடியரசாக மாற்றி அரசியல் அமைப்பில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து நீங்கள் இலங்கை அரசுக்கு எதிராக, அல்லது இங்கிலாந்து அரசுக்கு எதிராக பிரிவிக் கவுண்சில் அல்லது இலண்டன் உயர்நீதி மன்றங்களில் வழக்குத் தொடுக்கவில்லை. ஏன்? என்ற கேள்விக்கு, அவர் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்.
“தம்பி, நாங்கள் இந்தப் பிரச்சினையை அரசியல் ரீதியாகத்தான் பார்த்தோம். உண்மையில் இப்போதுதான் நினைக்கிறேன்;, நாங்கள் பிரிவிக் கவுண்சிலில் அல்லது லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கலாம் என்று. நாங்கள் தவறு செய்து விட்டோம்.” இப்படிப் பதிலளித்தார் உயர்திரு. சிவசிதம்பரம் அவர்கள்.
பிரித்தானியர்கள் எங்கள் நாட்டை வலிந்து கைப்பற்றி சிங்களப் பகுதியுடன் இணைத்தனர். அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் போது முன்னர் கைப்பற்றும் போது எப்படி இருந்ததோ அதே போன்று நாட்டை அவரவரிடத்து ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும். அப்படியல்லாமல் சிங்களவரிடத்து அனைத்து அதிகாரத்தையும் ஒப்படைத்துவிட்டுச் சென்றபடியால் பிரித்தானியரை எதிர்த்து அவர்களது நீதிமன்றத்திலே வழக்குத் தொடுத்திருக்க வேண்டும். 1958ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தை முன்னிலைப்படுத்தி பிரித்தானியருக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கலாம், ஆனால் அப்படி யாரும் செய்யவில்லை.
உயர்திரு. செல்வநாயகம் அவர்கள், உயர்திரு. பொன்னம்பலம் அவர்கள், உயர்திரு. அமிர்தலிங்கம் அவர்கள், உயர்திரு. சிவசிதம்பரம் அவர்கள் ஆகியோர் அன்று பிரசித்திப் பெற்ற சட்டத்தரணிகளாகத் திகழ்ந்தனர். சாணக்கியத்தில் மோட்டுச் சிங்களவர் சிறந்தவர்களா தமிழர்கள் சிறந்தவர்களா? என்று பார்த்தால் சிங்களவர் சிறந்தவர்களாகத் திகழ்ந்திருக்கின்றனர். ஏனெனில் அவர்களது இனம் சிதைந்துபோகவில்லை. அந்தளவுக்கு அவர்கள் தங்கள் இனத்தை பாதுகாத்துள்ளனர்.
இப்போது இன்றைய காலகட்டத்துக்கு வருவோம். நாங்கள் மட்டும்தான் தமிழீழ நிரந்தரக் குத்தகைக்காரர் என்ற கொள்கையிலிருந்து இன்னமும் பின்வாங்காத புலிகள் இராணுவத்துடன் சண்டையிடுகின்றனர். இவர்களுக்கு வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் வாரி இறைக்கின்றனர் பணத்தை. நாட்டின் மீது கொண்ட பற்றுதலால் இந்த நன்கொடை வழங்கப்படுகிறது என்று வைத்துக்கொள்ளலாம்.
இந்தக் கொடுப்பனவு மூலம் பெறப்பட்ட. பெறப்படும் ஆயுதங்களை வைத்துதான் புலிகள் போராடுகின்றனர். கொடுக்கப்படும் பணம் சரியான தீhவுக்காகத் தான் பயன்படுகிறதா அல்லது பயன்பட்டதா என்ற கேள்விக்கு யாரும் சரியான பதில் கூறமுடியாது. ஏனெனில் புலிகள் தமிழ் இயக்கங்கள் அனைத்தையுமே கொன்றொழித்தவர்கள். பல தமிழர்களைப் பிடித்துச் சித்திரவதை செய்து கொடுமைகள் பலவற்றை இன்னமும் செய்து வருகின்றனர். எனவே, வெளிநாட்டவர் கொடுத்தப்பணம் தங்களது அதிகார வெறிக்கும், பழிவாங்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டது என்பதனை மறுக்கமுடியாது. இவ்விதம் பெறப்பட்டப் பணத்தைப் பயன்படுத்தி பிற தமிழ் இயக்கங்களை அழித்ததைத் தொடர்ந்துதான் பல இயக்கங்கள் இலங்கை அரசிடம் சென்று அவர்களை நண்பர்களாக்கி இலங்கைச் சிங்களவரின் பக்கம் நியாயம் இருப்பதாகச் சொல்கின்றனர். இந்தவகையில் முன்னணியில் நிற்பவாகள் திரு. ஆனந்தசங்கரி அவர்கள், திரு. டக்கிளஸ் தேவானந்தே அவர்கள், திரு. சித்தார்த்தன் அவர்கள், கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் ஆவர்.
இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கள இராணுவத்தை விட தங்களது பயங்கர எதிரியாக நினைப்பது புலிகள் இயக்கத்தினரைத் தான். இவர்கள் நினைப்பதில் தவறில்லை. உண்மை இருக்கிறது. ஏனெனில் புலிகள் அவ்வளவு கொடூரமாக தமிழ் இயக்க உறுப்பினர்களை வெளிப்படையாகவும் மறைவிடங்களிலும், பாதாளச் சிறைகளிலும் வைத்து சித்திரவதை செய்து படுகொலை செய்ததை பலபேர் நேராகவே கண்டுள்ளனர்.
இன்று ரெலோ இயக்கம் அவர்களை ஆதரிக்கிறது. அந்த இயக்க உறுப்பினர்களை எப்படிப் படுகொலை செய்தனர் புலிகள் என்பதனை யாழ்ப்பாண மக்கள் நேரிடையாகக் கண்ணுற்றவர்கள். அந்தக் கொடுமையினைச் செய்தவர்கள் வீரர்களாக சித்தரிக்கப் பட்டதை வரலாறு என்றும் மன்னிக்காது என்பதனைத் தெரிந்துகொள்ள வேண்டும். தன் இனத்தை நேசிக்காத இயக்கம் யாருக்காகப் போராடுகிறது என்ற கேள்விக்கு வெளிநாடுகளில் பணம் கொடுப்பவர்களால் பதில் சொல்ல முடியுமா? எனவே, இலங்கை அரசிடம் சென்றடைந்து அரசின் செயற்பாட்டை ஆதரிப்பவர்கள் கூறிவரும் குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் உண்மையே! இலங்கை அரசிடமிருந்தல்ல, புலிகளிடமிருந்துதான் விடுதலை வேண்டும் என்று முழக்கமிடுகின்றனர் இதிலும் உண்மை இருக்கிறது!
ஆனால், இவர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு சிங்களவரது பக்கம் அணிசேர்ந்து தமிழர்களை ஒடுக்க நினைத்தது தவறு. எங்கள் இனத்தின் எதிரிகள் சிங்கள இனத்தவர். குறிப்பாக சிங்கள அரசியல்வாதிகள். நாம் விடுதலை கோருவது அந்தச் சிங்கள இனத்திடமிருந்துதான். எனவே, எங்களது நிரந்தர எதிரிகள் அவர்கள்தான். எங்கள் இனத்தின் எதிரியிடம் தஞ்சமடைந்து எங்கள் இனத்துக்கு எதிராகச் செயல்படுவதைத்தான் துரோகம் என்று சொல்கிறோம். இந்தச் செயலைச் செய்பவாகளைத் துரோகிகள் என்று சொல்வதைத் தவிர வேறு வார்த்தைகள் தமிழில் கிடையாது. எனவே, இவர்கள் துரோகிகள்தான்! ஒரு துரோகியை மடையர் என்று சொல்ல முடியாது!
தொடரும்
|