சுதந்திரம் தேடி ஆயுதம் ஏந்தியவர்கள் விடுதலைக்கான பாதையைத் தொலைத்துவிட்டு திசை தெரியாமல் தமிழக அரசியல் கட்சிகளின் குரல் வளத்தில் விடுதலைக்கு உரம் சேர்க்க முற்பட்டுள்ளனர். சிங்கள அரசியல் கட்சிகளுடன் ஒரே மேடையிலிருந்து விவாதிக்கத் தயாரான இவர்கள் சகோதர இயக்கங்களுடன் ஒரே மேசையில் அமர்ந்து பேசுவதற்கு தயாரில்லை என்று அறிவித்தனர் 1987ல். கௌரவம் குறைந்துவிடும் என்பதனைத் தவிர இவர்கள் வேறென்ன காரணம் சொல்ல முடியும்.
சிங்களவரது கைகளுக்குள் தமிழீழப் பகுதிகள் செல்லலாம். ஆனால் தமிழச் சகோதர இயக்கங்கள் தமிழீழத்தில் வாழமுடியாது. ஏகத்துக்கும் பிரதிநிதிகள் இவர்கள்தான். இன்று ஏகப் பிரதிநிதித்துவம் எங்கு இருக்கிறது என்று பார்த்தால் அது முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் கிளிநொச்சி மாவட்டத்துக்கும்தான். அதிலும் பாதிக்கு மேல் பறிபோய்விட்டது. எட்டு மாவட்டங்களில் ஆறரை மாவட்டங்கள் பறிபோய்விட்டன. அப்படிப் பார்த்தால் ஒன்றரை மாவட்டங்களுக்குத்தான் இப்போது அவர்களது ஏகப்பிரதிநிதித்துவம் பொருந்தும். ஆதலால் மொத்தத் தமிழினத்துக்கும் ஏகப்பிரதிநிதிகள் நாங்கள்தான் என்ற திமிரான கோரிக்கை கைநழுவிப் போய்விட்டது என்பதனைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பணமும் ஆயுதமும் விடுதலையைப் பெற்றுத் தரும் என்ற நீண்ட காலமாக நம்பியிருந்தனர். இறுதிக்கட்டத்தில்தான் தெரிகிறது அது தவறு என்று! இருந்தாலும் இன்னமும் வறட்டுக் கௌரவம்தான் முன்னிலை வகிக்கிறது. தமிழினத்தின் குத்தகையாளர்கள் தாங்களேதான். தமிழர்கள் குத்தகைப் பணத்தை தங்களிடம் மட்டுமே தரவேண்டும், பிற நாடுகளில் இருப்பவர்கள் அனுதாப குத்தகை செலுத்துகின்றனர். செலுத்தத் தவறியவர்களிடத்து கட்டாயக் குத்தகை வசூலிக்கப்பட்டது. இவை அனைத்தையும் தமிழினம் தாங்கிக் கொண்டது. ஏனென்றால் பொடியள் தனிநாடு பிடிச்சிடுவினம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. எப்படி இந்த நம்பிக்கை வந்தது?. பொடியள் எல்லாரையும் போட்டுத் தள்ளிவிட்டினம், அணுகுண்டு தயாரிக்கும் அளவுக்கு அவர்கள் வல்லவர்கள். அதனால் அவர்கள் பிடிச்சிடுவினம்! தங்களது கைகளுக்கு அகப்படாத கொம்புகளைக்கூட வெறும் வாயினால் சீவி விட்டனர் தமிழர்களில் சிலர்.
யாருக்கு எதிராகத் தமது துப்பாக்கிகளைத் திருப்பினரோ, யாரை உலக அரங்கில் தலைகுனிய வைத்தனரோ அவர்கள் உதவி செய்ய மாட்டார்களா? ஏன் தயக்கம், நாங்கள் என்ன செய்தோம், தந்தையர் நாடல்லவா! என்றெல்லாம் விளக்கக் உரை கொடுத்து வடக்கு நோக்கி நாடிநிற்கின்றனர்.
மோட்டுச் சிங்களவரும், மடத் தமிழரும் இணைந்து இலங்கைத் தமிழருக்கு உரிமை வழங்கப் போகின்றனர். அதனை உலகத் தமிழர்கள் கண்டு களிக்கப் போகின்றனர். சற்றுத் தூரத்தில் இருக்கும் சிங்கப்ப+ரில் மூன்றின மக்களும் அரசியல் அதிகாரத்துடன் நிர்வாகத்தை எப்படி நடத்துகின்றனர் என்று அறிந்து கொள்ள முடியாத மோட்டுச் சிங்களவரும், தங்கள் கைகளில் கிடைத்த ஆயுதத்தை யாருக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாத மடத் தமிழரும்தான் எங்கள் இனத்துக்கு உரிமைகள் பெற்றுத் தரப் போகின்றார்களா? இவை இரண்டுமே நடக்காதவை!
சிங்கள இனம் தமிழர்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ளனர். அவர்களிடத்திலிருந்து நாம் எதனையும் எதிர்பார்க்க முடியாது. விடுதலை பெற்றுத் தருவோம் என்று கூறி எங்கள் இனத்துக்காகப் போராடிய இயக்கங்களை கொன்றொழித்தவர்கள் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
தமிழ் மக்கள் புலிகளின் முன்வைக்கும் கேள்விகள் பின்வருமாறு உள்ளன:-
(01) தமிழர்களின் போராட்டப் பலத்தை வலுவிழக்கச் செய்தது தங்களது சகோதரப் படுகொலைக் கொள்கைதானே? இது சரியா! தவறா?
(02) இந்தக் கொள்கையினால் தமிழ் இனம் இப்போது துன்பப்படுகிறது என்பதை இப்போதாவது ஏற்றுக் கொள்கிறீhகளா? இல்லையா?
(03) தமிழ் மக்களின் தலைவர்களான திரு. அமிர்தலிங்கம், திரு. சிறிசபாரெத்தினம், திரு. பத்மநாபா போன்றோரைக் கொலை செய்தது தவறான செயல் என்று ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
(04) இந்திய அமைதிப்படையை வலுக்கட்டாயமாக சண்டைக்கு இழுத்து இந்தியாவை அவமானப்படுத்தியதை ஏற்றுக்கொள்கீறீர்களா? இல்லையா?
(05) தமிழர்களின் பொது எதிரியான பிரேமதாசாவுடன் இணைந்து தமிழ் இயக்கங்களையும், அமைதிப்படையையும் தாக்கியது தவறு என்று ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
(06) நாங்கள்தான் ஏகப்பிரதிநிதிகள் தமிழ் மக்கள் பற்றி யாரும் பேசக்கூடாது அப்படிப் பேசினால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்ற கொள்கை தவறானது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
(07) “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முதலில் ஏற்றுக்கொண்டு பின்னர் நிராகரித்து சிங்கள அரசுடன் சேர்ந்து குறைந்தபட்ச தீர்வான அந்த ஒப்பந்தத்தை செயலிழக்கச் செய்தது தவறு என்று இப்போதாவது ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
(08) ஈழத் தமிழருக்கு உதவுவதற்காக முன்வந்த மறைந்த பாரதப் பிரதமர் இராஜீவ்காந்தி அவர்களை தமிழகத்தில் வைத்துக் கொலை செய்தது நீங்கள் செய்த மாபெரும் தவறுகளில் ஒன்றா இல்லையா?
(09) “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை நிராகரித்து இப்போது 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றுவரை உங்களால் ஓர் உடன்படிக்கையினைக் கூட இலங்கை அரசுடன் ஏற்படுத்த முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
(10) இந்த 20 ஆண்டுகாலமும் தமிழர்கள் இழந்துவிட்ட உயிருக்கும் உடமைகளுக்கும் நீங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
(11) தமிழர்களுக்கு உதவிக்கு வந்த இந்தியாவை, அன்று தமிழர்களின் பொது எதிரியான சிங்களவர்களுடன் சேர்ந்து விரட்டி அடித்தீர்களே இன்று அதே இந்தியா உதவ வேண்டும் என்று தங்களின் விசுவாசிகள் மூலம் கோருவது வெட்கப்பட வேண்டிய விடயமா? இல்லையா?
(12) இந்த நிலைக்கு வந்த பின்னரும் சகபோராளி இயக்கங்களையும் அழைத்து நாம் ஒன்று சேர்ந்து போராடுவோம் என்று பகிங்கரமாக் கோராதது தவறு என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லையா?
(13) சிங்கள அரசுக்கு எதிரிகளாக இருந்த கருணா, பிள்ளையான் போன்றோரை தனக்குச் சாதகமாகவும் தமிழினத்துக்கு எதிராகவும் பயன்படுத்துகிறது இலங்கை அரசு. ஆனால் நீங்கள் எந்தத் தமிழர்களையும் அழைத்துக் கதைப்பது கிடையாது. உங்களை ஏற்றுக்கொண்டு சரணாகதி அடைந்தால் மட்டுமே (திரு. பாலகுமாரன், ரி.என்.ஏ போன்று) அவர்களைப் பயன்படுத்துவீர்கள். மோட்டுச் சிங்களவருக்கு இருக்கிற அறிவு கூட உங்களுக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
(14) தமிழினத்தின் ஏகப்பிரதிநிதி என்று கூறிக் கொலை செய்ததன் விளைவாக பெரும்பான்மையான தமிழருக்கு இன்று சிங்களவரே பிரதிநிதியாகி விட்டனர் என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?
(15) உங்களது பயங்கரவாதக் கொள்கையால் உங்களுக்கு நீங்களே தடையை ஏற்படுத்திக் கொண்டுள்ளீர்கள் உலக நாடுகளில் இன்று தமிழினத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது போராடுவது அனைத்தும் தமிழக சினிமாக்காரர்களின் கைகளுக்கும், சந்தர்ப்பவாத தமிழக அரசியல்வாதிகளின் கைகளுக்கும் காணிக்கையாக்கி மகிழ்கிறீர்கள். இந்தச் செயல் சரியானதாகப் படுகிறதா உங்களுக்கு?
(16) சினிமாவுக்கு கதைவசனம் எழுதி இயக்குவிப்பவர்களை தமிழினத்தின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி நடித்துக் காட்டும்படி தூண்டுகிறீர்கள். இதுவா ஓர் விடுதலை இயக்கத்துக்கும் உரிமைக்கும், சுதந்திரத்துக்கும் அத்திவாரமாக அமைவது?
(17) இலங்கைத் தமிழர்கள் ஒன்றிணைய மாட்டார்கள், ஆனால் சினிமாக்காரர்களும், தமிழக அரசியல் வாதிகளும் ஒன்றணைய வேண்டும், மத்திய அரசைப் பணிய வைக்க வேண்டும், உங்களுக்கு உதவ வேண்டும் இதுதான் சரியான போராட்டம் என்று உங்களுக்குப் படுகிறதா?
இப்படிப் பல ஆயிரக்கணக்கான கேள்விகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு பதில் கூறப்படாமல் ஆங்காங்கே அலைந்து திரிகின்றன! எங்கள் இனம் மாண்டு போக, சிங்கள வெறியர்களிடம் அடிமையாகிப் போகத்தான் இத்தனை ஆண்டுகாலம் நீங்கள் போராடித் தமிழினத்தை சல்லடை போட்டீர்களா?
சிந்தித்துப் பாருங்கள். எஞ்சிய கிளிநொச்சியையும், முல்லைத் தீவையும் தக்கவைத்துக் கொள்ள என்ன வழி என்று! 1800 அமைதிப்படை வீரர்களை நீங்கள் படுகொலை செய்தீர்கள். சிங்கள இராணுவம் ஒரு இந்திய சிப்பாயைக் கூட கொல்லவில்லை. சிங்களவர் தப்பித்துக் கொண்டனர். இந்தியாவை அவர்கள் நேரிடையாக எதிர்க்கவில்லை. நீங்கள் அன்று சிங்கள இனத்தவரால் பயன்படுத்தப்பட்டீர்கள் என்பதுதான் உண்மை! மறுக்க முடியுமா?
ஆனால், இன்றோ அதே சிங்கள இனத்தவர் உங்களை அழிக்க, நீங்கள் மீண்டும் இந்தியாவிடம் உதவி கேட்கிறீர்கள். “யுத்தத்தை நிறுத்துங்கள் என்று கூற வேண்டும் இந்தியா” இதுதான் உங்களது இன்றைய கொள்கை. உங்களது தேவைக்குப் பயன்படும் ரி.என்.ஏ. எம்.பி.மார்கள் என்று நினைத்துக் கொண்டீர்களா இந்தியாவை?
உங்களது கொள்கை சர்வாதிகாரமானது. ஓர் சர்வாதிகாரியை இந்தியா அங்கீகரித்து துணைநிற்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள், நியாயம், ஜனநாயகம் இவற்றை விரும்பும் எவரும் உங்களுக்கு உதவ முனவர மாட்டார்கள் இதுதான் உண்மை.
ஆனால், நீங்களோ விடாப்பிடியாக உதவ வேண்டும் என்று தொங்கோ தொங்கென்று தொங்குகிறீர்கள்! நீங்கள் மறைந்திருந்துகொண்டு சினிமா மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளைக் கொண்டு தொங்குகிறீர்கள் இது நியாயமானதா?
சிங்களவரிடம் தமிழ் நிலம் முற்றாகப் பறி போனாலும் போகட்டும், ஈழத் தமிழர்கள் ஒன்றுபடக்கூடாது. அப்படி எல்லாம் இறங்கிப் போய் தமிழர் உரிமை பெறக்கூடாது. புலிகளின் கௌரவத்துக்கு இழுக்கு வந்துவிடும். வெளிநாடுகளில் பணம் கொடுத்து ஊக்குவிப்பவர்கள் எல்லாம் தப்பாக நினைத்துக்கொள்வார்கள். கிளிநொச்சியும் போய் முல்லைத் தீவும் போனாலும் கௌரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது.
இது ஒரு நல்ல கொள்கை! தமிழர் உரிமை முற்றிலும் பறிக்கப்படுவதற்கு இந்தக் கொள்கை சிங்களவருக்கு நன்கு உதவி புரியும். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களைப் படுகொலை செய்யும் போது சிங்கள இனத்தவர் பெருமைப்பட்டுக்கொண்டனர். நாங்கள் செய்ய வேண்டிய வேலையை புலிகள் எங்களுக்காகச் செய்கின்றனர். உண்மையில் இவர்கள்தான் எங்கள் நண்பர்கள் என்று ஒரு சிங்களப் பத்திரிகை எழுதியது. அதாவது சிங்களவர்களுக்கு புலிகள் நண்பர்கள். இந்தச் செய்தி எல்லாம் உங்கள் காதுகளக்கு எட்டியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் நீங்கள் பிற பத்திரிகைகளைப் படிப்பதில்லை!
மோட்டுச் சிங்களவர் மடத் தமிழர்களை எப்படிப் பயன்படுத்தியுள்ளனர், இன்றும் எப்படிப் பயன்படுத்துகின்றனர் (திரு. டக்கிளஸ், திரு. ஆனந்தசங்கரி போன்றோரை) என்பதை சற்று ஓய்வெடுத்து ஆராய்ந்து பார்த்தால் தமிழினம் வெட்கித் தலை குனிய வேண்டிவரும்.
நாளை தொடரும்...
தீப்பொறி!
|