இலங்கைத் தமிழர்களின் துயரைத் துடைப்பதற்காக, முதன்முதலாக, ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 19 படகுகளில் உணவுப் பொருட்கள், எரிபொருள்களை இலங்கையின் வடக்குப் பகுதிக்கு அத்துமீறி அனுப்பி வைத்தவர் அன்றைய பிரதமர் ராஜிவ்.
பெங்களூரு விமான தளத்திலிருந்து ஐந்து இந்திய விமானப்படை விமானங்கள் மூலம், இலங்கையில் ஆகாயப் பிராந்தியத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்து, வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த இலங்கைத் தமிழர்களுக்குப் பாராசூட் மூலம் 24 டன் நிவாரணப் பொருட்கள் போட்டார் ராஜிவ்.
உண்ண உணவின்றி அல்லலுற்ற அப்பாவித் தமிழர்கள், இந்திய அரசு சார்பாக பிரதமர் ராஜிவ் காந்தி வழங்கிய உணவுப் பொருட்களைப் பெற்று மகிழ்ச்சிக் கடலில் திளைத்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
இலங்கைத் தமிழர் போராட்டம், ஆயுதமேந்திய போராட்டமாக மாறி, போராளிக் குழுக்களின் ஆதிக்கம் தலை தூக்கிய பிறகு, இலங்கை அரசோடு ஒப்பந்தத்தில் இவர்களை ஈடுபடுத்த இயலாத நிலை ஏற்பட்டது.
அதே நேரத்தில், பல்வேறு போராளிக் குழுக்களிடம் இணக்கமோ, ஒற்றுமையோ இல்லாத காரணத்தால், எந்தக் குழுவோடும் ஒப்பந்தம் போடுவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையும் இருந்தது.
இத்தகைய நிர்பந்தத்தில் தான் இலங்கை அரசோடு பிரதமர் ராஜிவ் காந்தி ஒப்பந்தம் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுவே ராஜிவ் காந்தியின் மரண சாசனமாக அமைந்து விட்டது.
கடந்த ஜூலை 29, 1987ல் ஏற்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பில் பரவியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, இந்தியாவிலுள்ள மாகாணங்களைப் போல, ஒரே மாநில நிர்வாக சுயாட்சியுடன் கூடிய அரசு உருவாக வழி ஏற்பட்டது.
இதன் மூலம் இலங்கைத் தமிழர்களின் நீண்ட நாளைய கனவான, "தமிழ்த் தாயகம்' அமைய வாய்ப்பிருந்தது. கடந்த 1956 முதல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற நியாயமற்ற நிலை மாறி, தமிழும் ஆட்சி மொழி என்ற சம உரிமை பெற்றது.
இலங்கைத் தமிழர்களுக்குப் பல்வேறு உரிமைகளைப் பெற்றுத் தந்த இந்த ஒப்பந்தத்தை செயல்பட விடாமல் முறித்தது யார்? விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், ஐம்பது நாட்களுக்குள் ஒப்பந்தத்திற்கு எதிராக சென்றது ஏன்?
இந்திய அமைதி காக்கும் படையினரும், விடுதலைப் புலிகளும் நேரடியாக மோதிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கும் காரணம் பிரபாகரன் தான்.
முதல் கட்டமாக, சகப் போராளி தமிழ் குழுக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களை பலியாக்கி மகிழ்ந்தவர் பிரபாகரன். பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி, விடுதலைப் புலிகள் போரிட்டதால், இந்திய அமைதி காக்கும் படையினர் ஏறத்தாழ ஆயிரம் பேர் அந்நிய மண்ணில் தேவையில்லாமல் மடிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இலங்கை ராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தினால் இலங்கைத் தமிழர்களுக்கு இழப்புகள் ஏற்பட்டதே தவிர, எந்தவித நற்பலனும் இதுவரை ஏற்படவில்லை.
இதே நிலை தொடர்ந்தால், இனியும் ஏற்பட வாய்ப்பில்லை என்பது தான் இன்றைக்கு இருக்கிற யதார்த்த நிலை."பிரதமர் இந்திரா காந்தியை கொலை செய்த சீக்கியர்களை மன்னிக்கவில்லையா?' என்று சிலர் கேட்கின்றனர்.
இந்திரா காந்தியை கொலை செய்தவர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தூக்கிடப்பட்டனர் என்பதை மூடி மறைப்பது ஏன்?
ராஜிவ் காந்தி படுகொலையை ஒரு, "துன்பியல் நிகழ்வு' என்று சர்வ சாதாரணமாகக் கூறி பிரபாகரன் தப்பிப்பதை இந்திய அரசும் ஏற்றுக்கொள்ளாது; இந்திய மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இலங்கைத் தமிழர்களின் துயரைத் துடைக்கத்தானே ராஜிவ் காந்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். அவரது தூய்மையான நோக்கத்துக்கு பரிசாக அவரையே பலியாக்கியது நியாயமா?
வங்கதேசம் உருவாவதை ஆதரித்த இந்திய அரசு, தமிழ் ஈழம் உதயமாக ஆதரிக்க மறுக்கின்றனர் என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்ற அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் முஜிபூர் ரஹ்மான் தலைமையில் ஆட்சி அமைவதை ராணுவ ஆட்சியாளர்கள் தடுத்ததால் உருவானது தான் வங்கதேசப் போராட்டம்.
ஆனால், இலங்கையில் நடைபெற்ற எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், ஆயுத பலத்தின் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனோடு ஷேக் முஜிபூர் ரஹ்மானை ஒப்பிடலாமா?
மேற்கு பாகிஸ்தானும், கிழக்கு பாகிஸ்தானும் பூகோள நிலப்பரப்பு மற்றும் மொழி ரீதியாக ஒரே நாடாக இருக்க இயற்கையாகவே வாய்ப்பில்லாத நிலையை, இப்படி பேசுபவர்கள் உணர மறுப்பது ஏன்?
இலங்கையில் தமிழ் ஈழம் மலர்ந்து சர்வாதிகாரியாக பிரபாகரன் மகுடம் தரித்த பிறகு தமிழகத்தில் யார் அரசியல் நடத்தலாம், யார் நடத்தக்கூடாது என்ற பட்டியல் தயாரித்து முடிவு செய்யப்பட மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
பலத்த பாதுகாப்புடன் இருந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையே கொலை செய்தவர்களிடமிருந்து, அறிக்கைகள் மூலமும், மேடை சொற்பொழிவுகளின் மூலமும் கருத்து மோதல்களை நடத்தி, நிராயுத பாணிகளாக வலம் வரும் தமிழக அரசியல் தலைவர்களுக்கு என்ன பாதுகாப்பு?
கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் இழந்த போது, அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை பலவந்தப்படுத்தி புலம் பெயற வைத்து, முல்லைத் தீவுக்கு உடன் அழைத்துச் சென்று மனிதக் கேடயமாக பயன்படுத்தலாமா?
இலங்கை ராணுவத்தினரின் கொடுமையான தாக்குதலுக்கு அப்பாவி தமிழர்களை இப்படி இலக்காக்குவது நியாயமா? இது தான் மனிதாபிமானமா?
அப்பாவி தமிழர்களின் உயிர் மீது உண்மையில் அக்கறை இருந்தால், போர் நிறுத்த அறிவிப்பை பயன்படுத்தி, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதித்திருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை?
பிரபாகரன் விருப்பப்படி தமிழ் ஈழம் அமைந்தால், 1981 மக்கள் தொகை கணக்குப்படி, வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு வெளியே - சிங்கள இலங்கையில், இந்திய தமிழர்கள் ஏழு லட்சம் பேர், இலங்கை தமிழர்கள் ஐந்து லட்சம் பேர், தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஏழு லட்சம் பேர் வாழ வேண்டிய நிலை ஏற்படும். இவர்களுக்கு யார் பாதுகாப்பு? சிங்க பேரினவாத அரசு இவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தாதா?
இந்திய இலங்கை பிரதிநிதிகளுடன் இன்னொரு நாட்டுப் பிரதிநிதியும் சேர்த்து ஓர் அமைதி குழு ஏற்படுத்தி, பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சிக்கலாமே!
இந்தியாவில் உள்ளதை போல அதிகாரம் கொண்ட மாநிலத்தை தமிழ்த் தாயகப் பகுதியில் உருவாக்கி, அங்கே தமிழர்கள் அனைத்து உரிமைகளுடன் வாழ திட்டம் வகுப்பதே சரியான தீர்வாகும்.
ஆர்.கோபண்ணா,
பொதுச்செயலர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
|