ஈழத் தமிழர்கள் கடந்த ஒரு மாதமாக உணர்ச்சி வசப்பட்டவர்களாகக் காணப்பட்டனர். குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் புகழின் உச்சிக்குச் சென்று பேச்சுவார்த்தை என்றால் புலிகளுடன் மட்டும்தான் என்று கூறி முன்யோசனையுடன் முன்பதிவு செய்தும் வைத்தனர்.
இந்தநிலை மாறி இப்போது இந்தியாவை திட்டுவதும், தூர்வாருவதும், ஆலோசனை வழங்குவதும் சிலர் சண்டைக்கு இழுப்பதுமாக காட்சிகள் மாறிவருகின்றன. தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ரி.என்.ஏ. எம்.பி.க்கள், “பிச்சை வேண்டாம் நாயைப் பிடியுங்கள் என்பது போன்று உணவு உடை தேவையில்லை போர்நிறுத்தம் மட்டுமே போதும், அதைச் செய்யச் சொல்லுங்கள்” என்று ஊர் ஊராகப் பேசி வருகின்றனர்.
இந்தியா திருந்த வேண்டும் என்று சில புலிகளின் ஆதரவாளர்கள் உரத்து அடித்துப் பேசுகின்றனர். இதில் பழ. நெடுமாறன் அவர்கள் அண்மையில் (30-10-2008) அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில் பல குற்றச்சாட்டுக்களைச் சொன்னவர், “முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி காலத்தில் கையெழுத்து இடப்பட்ட “இந்திய-இலங்கை” உடன்பாட்டினையும் மதித்து செயற்பட இலங்கை அரசு முன்வரவில்லை” என்று போட்டுள்ளார் ஒரு போடு! வரலாற்றை அனைவரும் மறந்துவிட்டார்கள் என்று நினைத்து நெடுமாறன் அவர்கள் தனது நன்றியுணர்வை இவ்விதம் வெளிப்படுத்துகிறார்.
ஓப்பந்தம் செயல் இழந்து போனதற்கு முதல் காரணம் விடுதலைப் புலிகள், இரண்டாவது காரணம் தமிழ்நாட்டில் அன்று இந்தியாவுக்கு எதிராகப் பிரசாரம் மேற்கொண்ட திரு. நெடுமாறன், திரு. வை.கோ, திரு. வீரமணி போன்றோர், மூன்றாவது காரணம் இலங்கை அரசு.
தமிழ் இனத்தைக் கூறுபோடத் தூண்டியவர்களில் முக்கிய பங்கு வகிப்பவர் இந்த நெடுமாறன் அவர்கள்.
புலிகள் இயக்கம் ஏனைய தமிழ் இயக்கங்களை வேட்டையாடிய போது, இவர்களில் யாராவது, “அப்படிச் செய்யாதீர்கள், இயக்கங்களிடையில் மோதல்கள் வேண்டாம், விடுதலை உங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து ஈழத் தமிழர்களுக்கும்தான் விடுதலை, எதிரியைத்தான் அழிக்க வேண்டும், அதே இனத்தை அழிப்பது விடுதலைப் போரட்டமல்ல, அது பயங்கரவாதம், எனவே நிறுத்துங்கள் சகோதரப் படுகொலையை” என்று இந்தப் புண்ணியவான்கள் கூறியிருக்கின்றனரா?
ஓவ்வொரு தமிழ் தலைவரும் கொல்லப்படும் போது இவர்கள் விளக்கக் கூட்டம் போட்டு ஊக்குவித்தனர் உட்பகையை! இதனை இவர்களால் மறுக்க முடியுமா? ஈழத் தமிழ் இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும் என்று என்றைக்காவது இவர்கள் கூறியிருப்பார்களா? எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியவர்கள் அந்த நெருப்பை அணைக்க இந்தியா தவறிவிட்டது என்று புதுக்கதை சொல்கின்றனர் இளஞ்சமுதாயத்துக்கு!
கூலிக்கு மாரடிக்கும் இவர்கள் இன்று பேராசிரியர்களாக மாறி அறிவுரை வழங்குகின்றனர் தமிழினத்துக்கு!
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிடுவதற்கு ஏன் மறுக்கிறது என்பது இவர்களுக்குத் தெரியாதா? தெரியாதது போல் நடிக்கின்றனர். எங்கள் இனத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள் போன்று பாசாங்கு செய்கின்றனர்.
ஈழத் தமிழினத்தின் விடுதலை பற்றிப் பேச தமிழினத்துக்கு தலைமை இல்லை! தனியாக பேசுவதா, இணைந்து பேசுவதா? இந்தியாவுடன் பேசுவதற்கு இலங்கையின் பிரதிநிதி வருகிறார், ஈழத் தமிழருக்காகப் பேச யார் இருக்கிறார்கள்?
நெடுமாறன் அவர்களும் வை.கோ. அவர்களும் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளா? பத்திரிகைகளிலும், மேடைகளிலும், ஊடகங்களிலும் இவர்கள்தான் பிரதிநிதிகள் போன்று பேசுகின்றனர். புலிகள் இப்படிக் காட்டுக்குள் முடங்கவேண்டும். இதனை வைத்து இவர்கள் தமிழ் நாட்டில் அரசியல் செய்ய வேண்டும், இதுதானே உண்மை!
இவர்கள் அனைவரும் அறிவாளிகளாக இருந்திருந்தால் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போதே ஈழத் தமிழர்கள் நிலையான உரிமையைப் பெற்றிருப்பர். பிறர் மீது குற்றம் சுமத்தியே இவர்கள் தங்கள் வாழ்நாள் அரசியலை நகர்த்துபவர்கள். இவர்களா எங்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப் போகிறார்கள்?
ஈழத் தமிழினத்தின் எஞ்சிய தலைமையை அழித்தது யார்? இந்தியா எங்கள் பிரச்சினையில் தலையிடுவதற்குத் தயங்குவதற்கான காரணம் யார்? என்ன செய்தால் இந்தியா தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் என்று புரியாத இவர்களா தலைவர்கள்?
ஒரு சிறு குறிப்பை மட்டும் விளக்கி முடிக்கிறோம்,
“திரு. புலேந்திரன் அவர்களையும் திரு. குமரப்பா அவர்களையும் இறக்கவிடாமல் காப்பாற்றியிருக்கலாம் இந்தியா” என்று ஒர நபரின் கட்டுரையில் படிக்க நேர்ந்தது! விடுதலைப் புலிகள் சைனைட் கொடுப்பார்கள், அவர்களை இந்தியா காப்பாற்ற வேண்டும், எந்த அறிவை வைத்து இந்த நபர் அக்கட்டுரையை எழுதினார் என்பது விளங்கவில்லை.
இரண்டு நாடுகளுக்கிடையில் நடந்த ஒப்பந்தத்தில் விடுபட்டுப் போன சில வரிகளினால் கடலில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட நபர்களை விடுவிப்பதில் தாமதம், எப்படித் தாமதிக்கலாம் என்று ஆத்திரப்பட்டு விசம் கொடுத்துக் கொல்லப்பட்டவர்கள் அவர்கள். விசத்தைக் கொடுத்தவர்கள் யார் என்று இந்த நபர்களுக்குத் தெரியாதா?
சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது என்று தமிழர்கள் சொல்வது எவ்வளவு பொருந்துகிறது எங்கள் விடுதலைக்கு! அன்று சிறுபிள்ளைகளாக இருந்தவர்கள் இருபது ஆண்டுகளின் பின்னரும் சிறுபிள்ளையாகவா இருக்க வேண்டும்?
ஈழத் தமிழருக்கான விடுதலையை ஈழத் தமிழர்களே தீர்மானிக்க வேண்டும், கூட்டுத் தலைமை மூலமே தீர்வு எட்டும், சந்தர்ப்பவாதிகளைப் பயன்படுத்தி இடைக்காலத் தீர்வை எட்டலாம். நிரந்தரத் தீர்வு என்றால் ஈழத்தின் கூட்டுத் தலைமை இந்தியாவுடன் பேச வேண்டும். அதற்கான முன்னெடுப்பை விடுத்து, பிறரையும், உதவிக்கு வரும் இந்தியாவையும் இழிவு படுத்தி வெற்றி காணலாம் என்று நினைப்பது தவறு.
முதலில் எங்களை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர்தான் ஏனையோரை அணுகவேண்டும். திருந்த வேண்டியது இந்தியா அல்ல! ஈழத் தமிழர்கள்தான். என்ன வழி என்று தெரியாமல் உளறுவது விடுதலையை வென்றெடுக்க உதவாது.
தீப்பொறி!
|