இலங்கையில் போர் முடிவுற்று ஈழத் தமிழினம் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலவீனப்பட்டு, ஒரு தலைமையற்ற சூழ்நிலையில், ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்ந்தெடுக்கும் தலைமை மூலம் அரசியல் ரீதியாக ஈழத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாவதாக ஈழத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க தமக்கு மட்டுமே தார்மீக உரிமை உண்டு என்று நினைத்து, இராணுவம், அரசியல், மற்றும் தலைமை ஆகியவற்றால் பலவீனப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது தங்கள் தவறுகளை உணர்ந்து, இனி தனித்து நின்று போராடி வெற்றி கிடைக்கப் போவதில்லை என்று காலம் கடந்து உண்மையை அறிந்து, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்கிறோம் என்றும் அனைத்து இயக்ககங்களோடும் கதைத்துக்கொண்டிருக்கிறோம் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களால் நியமிக்கப்பட்ட அனைத்துலக தொடர்பாளர் திரு. செல்லையா பத்மநாதன் அவர்கள், ஈழத் தமிழர்களும், அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் பழையவைகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் அவர்களது தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என்பது அவரது விருப்பமாகும்.
இரண்டாவதாக, விடுதலைப் புலிகளினால் பதவியேற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பைபின் பாராளுமன்றத் தலைவர் திரு. சம்பந்தன் அவர்களும் அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் ஒன்றிணைந்து ஈழத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து விட்டு, தாங்கள் மட்டும் தனியாக இந்தியா சென்று இந்தியத் தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை விடுத்து, இந்தியாவால் மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும் என்ற உண்மையை தற்போதுதான் அறிந்து கொண்டவர்களாக, ‘தமிழ் மக்கள் கௌரவமாக வாழ வழி செய்யும் வகையில் அரசியல் தீர்வு காண இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமில்லை” என்று கருதுவதாக அறிக்கை விடுத்துள்ளார்.
இந்த உண்மையை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களோடு மிகவும் நெருக்கம் கொண்டிருந்த அவர்கள், அவருக்கு தெளிவாக எடுத்துரைத்திருந்தால், இன்று தமிழ் மக்களுக்கு இவ்வளவு பெரிய பேரிழப்பு ஏற்பட்டிருக்காது. இந்நிலையில் அவரும் தனது தலைமையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புகின்றார் என்றே கருதகிறோம்.
மூன்றாவதாக, தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றும் இந்தியாவின் தமிழ்நாட்டினை ஒத்த தீர்வினை இந்தியா ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் ஈழத் தமிழர்களின் முதல் எதிரி, துரோகி என்று பட்டியல் போட்டுக்கொண்டிருக்கிறார். இந்தியா போன்று மாநிலம் அமைந்தால் முதலமைச்சர் பதவியை ராஜபக்ச தன்னிடத்துத் தருவார் என்று அவரும் நம்பியிருக்கிறார். இதிலிருந்து அவரும் தமது தலைமைக்கும் பதவிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்.
நான்காவதாக, அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தே அவர்கள், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், சிறிலங்கா அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தப் போகும் தீர்வுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்கா அமைச்சரவையில் பதவிவகித்துக் கொண்டு இந்தியாவை துணைக்கு அழைக்கிறார். அரசிடம் ஈழத் தமிழர்களுக்கு எந்தவித உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அதில் பதவி வகிக்கும் இவர் அரசியல் தீர்வுக்கு இந்தியாவை அழைப்பது ஜனாதிபதி ராஜபக்சயின் ஆலோசனையில் தமிழர்களையும் இந்தியாவையும் ஏமாற்றும் முயற்சியா என்பது புரியாமல் இருக்கிறது. ஜனாதிபதிக்கு தலையையும், இந்தியாவுக்கு வாலையும் காண்பிக்கும் முயற்சியா என்பதும் விளங்கவில்லை. எனவே, இவரும் பதவி, மற்றும் புகழின் பின்னால் நீண்டதூரம் சென்றவராகிறார்.
ஐந்தாவதாக, கிழக்கு மக்களுக்கு விடிவை பெற்றுத் தருகிறேன் என்று கிழக்கின் விடிவெள்ளி என்று தன்னைத் தானே அறிவித்து, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை சிதைத்து, பெரும்பான்மையாக இருந்த கிழக்கின் தமிழ் மக்களை இன்று மேலும் சிறுபான்மை மக்களாக மாற்றிவிட்டு, பெரும்பான்மை கட்சிகளோடு இணைந்து பெரும்பான்மைக் கட்சியின் துணை தலைவராக மாறிய முரளிதரன் (கருணா) அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு பொலிஸ், காணி உரிமைகள் தேவையில்லை என்று அறிவித்து, சிங்கள இனத்துக்கு தனது நன்றியைத் தெரிவித்து கழுதை மேய்ப்பவருக்கான மந்திரி பதவி கொடுத்தாலும் தாராளம் என்று அமைச்சராகி தனது பயணத்தை முடித்துக்கொண்டார்.
கிழக்கின் முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களோ, நான் முதலமைச்சர் பதவியில் எந்தவித உரிமைகளும் இல்லாமல் பொம்மையாக இருக்கிறேன். இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்று அறிவித்துள்ளார். தகுதிக்கு மிஞ்சிய பதவியாகிவிட்டது அவருக்கு.
தற்போதைய சூழ்நிலையில் கருணாவைத் தவிர மற்ற அனைவருமே இந்தியாவின் உதவியினால்தான் ஈழத் தமிழர்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால், இதுவரையிலும் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவிடமோ, அல்லது சர்வதேசத்திடமோ அல்லது சிறிலங்கா அரசாங்கத்திடமோ ஒரே அணியாகச் சென்று ஒரே கோரிக்கையினை வைத்தது கிடையாது.
இவர்கள் அனைவரும் ஒன்றிணையாமல் ஈழத் தமிழர்களுக்கு எந்தவிதப் பயனும் ஏற்பட போவதில்லை. ஒருவேளை, இறுதிக்கட்டப் போரில் அதிகளவான தமிழ் மக்கள் சாவதற்கு நாம் காரணமாகிவிட்டோம் என்று நினைத்து ஜனாதிபதியினால் தமிழ் மக்களுக்கு சில உரிமைகள் கொடுக்கப்படலாமே தவிர இவர்களால் நிச்சயம் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது.
தற்போது இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் நடத்தும் நாடகங்களைப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் தனியாக போராட்ட உரிமையை எடுத்துக்கொள்வதற்கு இவர்களும் ஒரு காரணம் என்றுதான் தோன்றுகிறது.
இறுதியாக. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து தமிழ் மக்கள் சுயாட்சி உரிமைகள் பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கொள்கை மாறாமல் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டிருப்பவர், இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டின் உதவியினாலும் ஈழத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இன்றுவரை உறுதியாக உள்ளவர், எந்த நேரத்திலும் தனது பொது எதிரியுடன் இணையாமலும், எந்தவித உதவிகளும் பதவிகளையும் பெறாமல் இன்று வரை தனது கொள்கையில் உறுதியாக இருப்பவர், எந்தவித விளம்பரத்திற்கும், பதவிக்கும் ஆசைப்படாதவர், “ அரசியல் தலைமையாக ராஜன் மட்டும் என்னோடிருந்திருந்தால் ஈழத்தை எப்போதோ வென்றிருப்பேன்” என்று விடுதலைப் புலிகளின் தலைவரால் சக உறுப்பினர்களிடம் புகழப்பட்டவர் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்களாவர்.
அவர், தமிழ் அரசியல் கட்சிகளையும். இயக்கங்களையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டுத்தலைமைய உருவாக்கி, ஒரு பொதுவான கோரிக்கையையும் உருவாக்கி இந்தியா, சர்வதேசம் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தோடும் அரசியல் ரீதியாக சந்திப்பது என்ற உன்னதமான நோக்கத்துடன் மேற்கொண்ட நடவடிக்கைகள் சில சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்களாலும், பொருளாதாரப் பிரச்சினையினாலும் பின்தள்ளப்பட்டு வருகின்றமை வேதனைக்குரியவை. எனினும் தனது முயற்சியில் வெற்றிபெற தொடர்ந்தும் அயராது உழைத்துக் கொண்டிருப்பவர்.
இந்தியாவின் ஆதரவை ஈழத் தமிழ் இனம் பயன்படுத்தி வெற்றி காண வேண்டிய காலம் போய், சிங்கள இனம் இந்தியாவின் ஆதரவைப் பயன்படுத்தி ஈழத் தமிழினத்தை வெற்றிக்கண்டுள்ளது. இந்தியா விடுதலைப் புலிகளை ஒடுக்க வேண்டும் என்று நினைத்ததே தவிர அழிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க வில்லை. இந்தியாவின் ஆதரவை இழந்தமையால்தான் தாங்கள் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது என்று இறுதியில் விடுதலைப் புலிகள் தெரிந்துகொண்ட விடயம் இது. இன்னும் காலம் கடந்து போகவில்லை.
மீண்டும் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்துள்ளது. அதாவது, தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரே அணியில், ஒரு தலைமை அல்லது கூட்டுத் தலைமையின் மூலம் ஒரு பொதுவான கோரிக்கையுடன் இந்தியாவை தொடர்புகொண்டால், ஈழத் தமிழர்கள் விடயத்தில் நல்ல தீர்வு காணலாம் என்பதை வெளியுறவுக் கொள்கையாக்கி, அதனை நிறைவேற்றிட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உயர்திரு. இரா.அன்பரசு அவர்களை தமிழர்களின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்துள்ளது.
ஈழத் தமிழர்களின் உரிமைகளை வென்றிட பல வழிகளில், பலமுறை முயற்சிகளை எடுத்துள்ளோம். எதுவும் இதுவரை பயன்தரவில்லை. கடைசி முயற்சியாக இந்த நேரத்திலும் நாம் ஒன்றிணையாவிட்டால், இந்தியாவைப் பயன்படுத்தாமல் விட்டால், மேற்கொண்டு ஒரு தலைமுறை நாம் அழிவினைச் சந்திக்கவேண்டி வரும்.
நாகராஜா சங்கரன்
சுவீஸ் கிளைச் செயலாளர்
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)
|