1948 முதல் தமிழினத்தை சிங்கள ஆதிக்க வெறியர்களிடத்திருந்து விடுவிக்க தமிழர்கள் பெரும் பாடுபட்டனர். படித்த தலைவர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் தெளிவாகப் பேசினால் உரிமைகள் கிடைக்கும், விடுதலையும் கிடைக்கும் என்று நம்பினர், மக்களையும் நம்ப வைத்தனர்.
இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றிப்பெற்று உறுப்பினர்களாகினால் விடுதலைக்கு வழி காட்டிவிடுவார்கள் எங்கள் தலைவர்கள் என்று நம்பிய மக்கள் அந்த வழிமுறையில் பின்நாளில் நம்பிக்கை இழந்து தோல்வியுற்று ஏமாற்றமும் அடைந்தனர்.
ஆயுதத்தால் தீர்வினைத் தேடிக்கொள்ளலாம் என்று நினைத்த இளைஞர்கள் திட்டங்கள், வழிகள் எதுவும் தெரியாமல் யுத்தத்தில் இறங்கினர். பணம், ஆயுதம், அதிகமான நபர்கள் இவற்றினைக் கண்டதும் தங்களை அறியாமலே ஆதிக்கம் செலுத்தப்பபுறப்பட்டனர். குறிப்பாக விடுதலைப் புலிகள் இந்த ஆதிக்க வெறிக்கு சுலபமாக அடிமையானார்கள்.
அனைத்தும் நானே என்ற கர்வம், புலிகள் என்ற இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கமாக உலகுக்குக் காண்பித்து அதன் மீது பெருமை கொள்ளவும் வைத்தது. எதிரி எவ்வளவு பலமானவராக இருந்தாலும் கவலை இல்லை. சக இயக்கங்கள் பங்குக்கு வந்துவிடக்கூடாது என்று தூரப்பார்வையில் சிந்தித்து அழித்து விடுவோம் இன்றே என்று மிகவும் முக்கியத்துவம் கொடுத்து துரோகிகள் என்ற பட்டமும் சுமத்தி படுகொலை செய்தனர் தமிழ்ப் போராளிகளைப் புலிகள்.
ஆனால் பயங்கரவாதிகள் என்ற சிறப்பான பட்டப் பெயரை தாம் வாங்கி வருவதை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை! பதிலாக அதனையிட்டுப் பெருமைப்பட்டுக் கொண்டனர் அவர்கள். இவர்களைக் கண்டு மக்கள் பயப்படுகின்றனர் என்பதும் இவர்களுக்கு பெருமையாகப்பட்டது.
இந்தப் பயம் இவர்களுக்கு பெரும் வருவாயை ஈட்டித் தந்தது. இதனால் மேலும் மேலும் பயங்கரவாதச் செயல்களைச் செய்தனர் புலிகள். தமிழ் மக்கள் உரிமைகளுடனும் சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்று கண்ட கனவு பாழ்பட்டு அதற்குப் பதிலாக பயங்கரவாதத்தில் மூழ்கடித்தது மக்களை.
இவற்றில் இருந்து விடுபடுவது எப்படி என்பது பெரும்பாடாக இருந்தது. விடுதலை கோரிய இயக்கத்திடமிருந்து தப்பிப்பதும் ஒரு விடுதலையாக இருந்தது. ஒரு கட்டத்தில் இலங்கை அரசே மேலானது என்று நினைக்கும் அளவுக்கு பயங்கரவாதம் தலைதூக்கி நின்றது.
சிங்கள இனத்தின் கொள்கையின்படி தமிழர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள், அல்லது விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள் என்பதுதான் மகாவம்சத்தினுடைய வழி காட்டுதல். அந்தக் கொள்கையை நிறைவேற்ற சிங்கள இனத்தவர் இரண்டாயிரம் ஆண்டுகள் காத்திருந்தனர். அது இப்போது கைகூடியுள்ளது. அழிக்கப்பட்டு, அடக்கப்பட்டு, அடிமைகளாக்கப் பட்டுள்ளனர் தமிழர்கள். இதுதான் அவர்களது கொண்டாட்டத்துக்கான காரணம்.
பயங்கரவாதத்திற்கான போர் என்பது வெளிநாட்டு உதவிகளுக்காகச் சொல்லப்படும் கவன ஈர்ப்புத் தந்திரம். பௌத்த போதனையின் கொள்கைகளை நிறைவேற்றும் நவீன துட்டகைமுனு இந்தச் சந்தற்பத்துக்காக காத்திருந்தார் என்பதுதான் உண்மை!
அனைவரையும் அழித்துவிட்டு அனுதாபம், அங்கீகாரம், எதுவுமின்றி வெறும் ஆயுதத்துடன் தனித்து நின்றார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அறிவுரை, ஆலோசனை கூற இவருக்கு யாரும் இல்லை. தமிழர்களது தலைவிதியை நான் வென்று காட்டுகிறேன் பார் என்று உதவிக்கு வரவேண்டிய அனைவரையும் அவமதித்து படுகொலை செய்தார்.
தமிழீழத்தின் அருகில் இருக்கும் ஒரே நாடு இந்தியா, உணவு வழங்க, அடைக்கலம் கொடுக்க, ஏன் காயப்பட்டால் மருந்து கட்டுவதற்கும் நாங்கள் இந்தியாவைத் தான் நம்பியிருக்க வேண்டும். எங்கள் விடுதலைக்குப் பக்கபலமாக இருக்கவேண்டிய நாடு ஒன்றினை சர்வ சதாரணமாகக் கணக்கிட்டு நகைப்புக்கு உள்ளாக்கினர் புலிகள்.
1997ஆம் ஆண்டு திரு. வாஜ்பாய் அவர்களை பிரதமராகக் கொண்ட இந்திய அரசு ஐந்து அணு குண்டுகளை வெடிக்கச் செய்து தனது வலுவை உலகுக்கு அறியப்படுத்தியது. இந்த நிகழ்வுக்கு புலிகளின் பரப்புரை நிபுணர் ஒருவர் செய்தி வெளியிட்டார். “ஐந்து குண்டென்ன, எங்கள் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் நினைத்தால் பத்து அணு குண்டுகளை தயாரித்து காண்பிப்பார்” என்று சொல்ல, புலிகளின் ஊடகங்களில் அச் செய்தி வெளியானது. இந்தியாவின் அணுகுண்டு சோதனைக்கும் பிரபாகரனுக்கும் என்ன சம்பந்தம் இருந்தது? இந்தியாவை வம்புக்கு இழுக்கும் செயல்தானே!
2006ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நன்கொடை வழங்கும் நாடுகள் என்ற (Donors countries ) அமைப்பினர் கூடி புலிகளைத் தீர்த்துக் கட்டுவதற்குத் திட்டம் தீட்டினர். யூரோப்பிய யூனியன், நோர்வே, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் கூடி இலங்கைக்கு உதவி புரிவது, இலங்கை 2009 மே தினத்துக்கு முன்னர் புலிகளைத் தீர்த்துக் கட்டுவதுதான் அந்த திட்டமும், நன்கொடையும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையொப்பம் இடச் சொல்லி இந்த நாடுகள் கோரின. அதனை மறுத்தது இந்தியா.
புலிகளைத் தீர்த்துக் கட்டும் வரை இலங்கை அரசுக்குத் தேவையான பண உதவியை இந்த நாடுகள் 2009 மே மாதம் வரை செய்வது என்பதுதான் இவர்களது கொள்கை. 2006 மே முதல் 2009 மே மாதத்துக்குள் அதாவது மூன்று ஆண்டுக்குள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இந்த திட்டத்தை இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச செய்து முடிக்க வேண்டும்.
தேவையான பணத்தைக் கொடுத்தன இந்த நாடுகள். அதே போன்று தேவையான ஆயுதங்களைக் கொடுத்தன சீனா, ரசியா, ஈரான், பாகிஸ்தான், லிபியா ஆகிய நாடுகள். தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை இலங்கை ராணுவம் மேற்கொண்டது. ஆனால், இலங்கைத் தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் இந்தியாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இங்கேதான் இலங்கை அரசின் உளவுத்துறை திறம்பட செயல்பட்டது!
மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும், வெளியுறவு அமைச்சரும் இந்தியாவின் வழி நடத்தலில்தான் யுத்தம் நடைபெறுவது போன்ற ஓர் தோற்றத்தை ஏற்படுத்தி இந்தியாவில் தெருமுனை வாய்வீச்சாளர்களை புலிகளின் பிரசார வாய்வெடி வீரர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் இந்தியாவே பிரிந்துவிடும் என்ற அளவுக்கு முழக்கமிட்டனர். கேளிக்கைக் கூட்டம் போட்டு மேடைகளில் விளாசினர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தேர்தலில் வாக்குகள் பெற்றுவிடலாம் என்ற ஆசையில் இந்திய மத்திய அரசை வம்புக்கு இழுத்து வசைபாடி வாக்குக் கேட்டனர். ஈழத் தமிழர்களின் சாவை வாக்குப் பெறும் தந்திர யுத்தியாகக் கையாண்டனர் இந்த வகையறாக்கள்.
2007ஆம் ஆண்டு மாவீரர் உரையில் வி.புலிகளின் தலைவர் பிரபாகரன் கீழ்க்கண்டவாறு உரை படித்தார்.”இந்தியா எட்டப்பர் கூட்டத்துடன் தெற்கு நோக்கி வல்லாதிக்கம் செலுத்தப்புறப்பட்டது அதனை நாங்கள் முறியடித்தோம்” என்று படித்தார்.
யார் எட்டப்பர்? அன்று எங்கள் எதிரியான சிங்கள அரசுடன் இணைந்தவர்கள் எட்டப்பர்களா? அல்லது ஏனைய இயக்கங்கள் எட்டப்பர்களா? என்பதைக் கூட பகுத்தறிந்து பார்க்க முடியாதவர்களாக இருந்தனர் புலிகள்.
இதே போன்று 2002 ஏப்பிரல் 10ந் திகதி பத்திரிகையாளர் மாநாடு ஒன்றினை கிளிநொச்சியில் கூட்டிய வேலுப்பிள்ளைப் பிரபாகரன் அவாகள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
பத்திரிகையாளர் கேள்வி:- முன்னாள் பாரதப் பிரதமர் இராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் உங்கள் மீது பிடிவாரண்ட் இருக்கிறதே?
புலிகள் தலைவரின் பதில்:- “நடக்கக் கூடிய காரியமா பேசுங்கள்” என்று பதிலளித்தார். இவ்விதமான பதில்கள் இந்தியாவை அவமானப்படுத்துவனவாகவே இருந்தன.
விடுதலைப் புலிகளை ஒடுக்க வேண்டும் என்று நன்கொடை நாடுகள் முடிவெடுத்தன! இவற்றுக்கான காரணங்கள் மூன்று.
(01) மனித வெடிகுண்டுகளைத் தயார் செய்து அரசியல் தலைவர்களைப் படுகொலை செய்வது, மக்கள் மத்தியில் மனித வெடிகுண்டு நுழைந்து பேரழிவை ஏற்படுத்துவது.
(02) பெரும் பணத்துக்காக அல்லது பாரிய அழிவுக் கருவிகளுக்காக பிற நாடுகளின் அரசியல் தலைவர்களை, அல்லது அரசு நிர்வாகத் தலைவர்களை படுகொலை செய்யும் மனப்பக்குவத்துடன் அதற்குண்டான ஆற்றலைப் பெற்றுள்ளமை.
(03) விமானத்தை கள்ளச் சந்தையில் வாங்கி வான்படை அமைத்து உலகை மிரட்டியமை. பலதரப்பட்ட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு 30 நாடுகளுக்கு மேல் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்று விமானத்தைப் பயன்படுத்தினால் மீண்டும் ஓர் 09/11 ஏற்பட வழி வகுக்கும்.
இந்த மூன்று காரணங்களுமே புலிகள் இயக்கம் அழிக்கப்பட காரணமாக அமைந்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த நாடுகள் இவர்களை அழிக்க வேண்டும் என்று திட்டங்கள் வகுத்து, இலங்கை அரசுக்கு பண உதவிகள் செய்தனரோ அந்த நாடுகளை இவர்கள் வெகுவாக நம்பினர். அவர்கள் இவர்களைக் காப்பாற்றிவிடுவர் என்றும் நம்பினர். இந்த அழிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டு பண உதவிகள் செய்தவர்களே அவர்கள்தான் என்பது இன்றுவரை இவர்களால் அறியப்படாமல் இருப்பதுதான் வேதனை!
அதிலும் ஜப்பானில் இருந்து ஒரு நபர் இலங்கைக்கு வருவார், அவர்தான் (அகாசி) புலிகளின் அழிவுக்கு சூத்திரத்தாரி என்பது இன்றுவரை மறைக்கப்பட்டு வருகிறது.
‘பிரபாகரனைப் பிடித்து அவரது கையை முறுக்கி முதுகில் குத்தி இழுத்துவர வேண்டும்” என்று ராஜபக்சயிடம் கூறி ஊக்கமளித்தவர்தான் இந்த நன்கொடையாளர் அகாசி! நோர்வேகாரரும் இதே கொள்கையுடன்தான் செயல்பட்டார் என்றால் நம்பவா போகின்றனர் புலிகளின் ஆதரவாளர்கள்!
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடைசி இரண்டு நாட்களும் 16,17ந் திகதிகள் மிக முக்கியமான நாட்களாகும். தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டு அனைவரிடத்திலும் உதவி கோரிய நாட்களாகும் அந்த நாட்கள்.
உதவிக்கு யாரும் தேவையில்லை என்ற எண்ணத்துடன் 1986ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கிய புலிகள் 2009 ஏப்பிரல் மாதத்தில்தான் தங்களது கொள்கையை மாற்றிக் கொண்டனர். காலம் கடந்த கொள்கை மாற்றம் யாருக்கும் பலனற்றுப் போனது.
இந்தியா, 2007, 2008, 2009 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் மூன்று தடவைகள் புலிகள் இயக்கத்தினரை சற்று விட்டுக்கொடுத்து இறங்கி வரும்படி கோரியது” புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மதிக்கவே இல்லை. கூட இருந்த அவரது தலைவர்கள் பிரபாகரனது சம்மதத்துக்காக காத்திருந்தனர். எங்கள் தேசமும், மக்களும் பாதுகாப்பாக வாழ இது ஒரு நல்ல சந்தற்பம். எனவே, இந்தியாவுடன் அனுசரித்துப் போகவேண்டும் என்று புலிகளது துணைத் தலைவர்கள் சிலர் எடுத்துச் சொல்லியும் புலிகளின் தலைவர் சம்மதிக்கவில்லை.
வவுனியா மடுப் பிரதேசத்தைத் தாண்டி இலங்கை ராணுவம் முன்னேறி வரும் போது கூட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றிற்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக தனது விமானப்படை ஓட்டுனர்களின் சாகசத்துக்கு பதக்கமும் பரிசும் கொடுத்து கௌரவித்தார் பிரபாகரன். இச்செயல் மேலும் இந்தியாவையும் ஏனைய நாடுகளையும் வெறுப்படையச் செய்தது. தனது ஆட்சிக்கு எந்தப் பங்கமும் இல்லை. அனைத்தும் வழக்கம் போல் நடைபெறுகின்றன என்பதனை வெளியுலகுக்குக் காட்டும் நடவடிக்கையாதத்தான் அமைந்தது இச்செயல்.
இனிமேல் இவற்றினை தோண்டி எடுத்து ஆராய்வதில் பயன் இருக்கப்போவதில்லை. இருந்தாலும் ஓர் எச்சரிக்கை உணர்வில் சந்தேகங்களை மட்டும் முன்வைக்க விரும்புகிறோம்.
17-05-2009 அன்றும் அதற்கு முதல் நாளும் புலிகளின் தலைமை இலங்கை அரசிடம் சரணடைவது பற்றிப் பலரிடமும் கதைத்துள்ளனர். இவர்களில் புலிகளின் புண்ணியத்தில் எம்.பி.க்களான சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். திரு. சந்திரநேரு, திரு. கஜேந்திரன் மற்றும் திரு. சேனாதிராசா ஆகிய உறுப்பினர்கள் முக்கியமானவர்கள் ஆவர்.
இவர்களது வாக்குறுதியை நம்பித்தான் புலிகளின் தலைவர்கள் சரணடையச் சென்றதாக தொடர்புடையவர்கள் அனைவரும் தெரிவிக்கின்றனர். இலங்கை அரசாங்கம் 18ம் திகதி அறிவிக்கிறது பிரபாகரனை கொன்றுவிட்டோம் என்று. மறுநாள் அவரது உடலை யாராவது கேட்டால் அவர்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் அரசு தெரிவித்தது. பிரபாகரனின் தயவில் எம்.பி.க்களான இவர்கள் ஏன் பிரபாகரனின் உடலை அரசிடமிருந்து கேட்டுப்பெற வில்லை. இவர்கள் மூவருக்கும் தெரியும் அங்கு என்ன நடந்தது என்று! இவர்கள் இதன் பின்னர் அப்படியே மௌனித்து விட்டனர். இப்போது இந்தியாவுக்குச் சென்று அடுத்தத் தேர்தலில் எம்.பி.க்களாவதற்கான நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களைச் சந்தித்து அறிக்கை எழுதி அரசிடம் சமர்ப்பித்து டெல்லியின் கதவைத் தட்டித் திறந்து ஏனையோருக்கு முன்னர் இடம்பிடிக்க முயற்சிக்கின்றனர். யாரினால் இந்தப் பதவிகளை அடைந்தனரோ அந்தத் தலைவன் விழ்ந்து கிடக்கையில் தலைமறைவானவர்கள் தமிழ் நாட்டில் அறிக்கை சமர்ப்பித்து மீண்டும் பதவியை அடைய முயற்சிக்கின்றனர். இவர்களா எங்கள் இனத்தின் விடுதலையை வென்றெடுத்துத் தரப் போகிறார்கள்? இது போனால் அடுத்துவரும், எப்படியாவது எம்.பி. பதவி வந்தடையும் என்று மீண்டும் முயற்சிக்கின்றனர்.
உள்ளுராட்சித் தேர்தல் என்றால் வேண்டாம் என்று சொல்லும் இவர்கள், ஒருவேளை நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை அறிவித்தால் முன்டியடித்து முன்னே சென்றுவிடுவார்கள் இந்த எம்.பி.க்கள்.
நாடாளுமன்றத்தில் மிகப்பெரும்பான்மையாக சிங்கள எம்.பி.க்கள் இருக்கும் வரை தமிழர் எந்த உரிமையையும் பெற முடியாது. நன்கு பேசினால் உரிமை கொடுப்பார்கள் என்று நம்பியிருந்த காலம் ஒன்று இருந்தது. நாடாளுமன்றத்தில் எதுவுமே நடக்காது என்று அறிந்த பின்னர்தான் ஆயுதம் ஏந்தப் புறப்பட்டனர் இளைஞர்கள் என்பதனை மறந்துவிடக்கூடாது.
அடாவடியாகத் தேர்தல் ஒன்றினை அறிவித்து இலங்கை அரசு கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறது. எங்கள் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதும், தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினையையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. இலங்கை அரசை இப்போது யாரும் தட்டிக்கேட்க முடியாது என்ற நிலையில் வலுவாக உள்ளது.
சிங்கப்பூரிலிருந்து வந்த சிங்கள புத்தபிக்கு எங்களது தாய் தந்தையரற்ற குழந்தைகள் 350 பேரை தத்தெடுத்து வளர்ப்பிக்க முயற்சிக்கிறார். எங்கள் உடன்பிறப்புகளை நாம் சென்று பார்க்க அனுமதி கிடையாது. ஆனால் புத்தபிக்கு தத்தெடுக்க அனுமதி வழங்குகிறது சிங்கள அரசு. எங்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமை சிங்கள பிக்குகளுக்குக் கிடையாது. அவர்களைப் பராமரிக்க தமிழர்களான நாம் இருக்கிறோம். இந்தச் செயலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஈழத் தமிழர்களின் முன் இன்று இருக்கும் முக்கிய பணி ஒன்றுபடுதல் மட்டுமே. யார் வருகிறார்களோ இல்லையோ ஒரு முனைப்புடன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்தது இந்தியாவுக்கு எதிராகப் பேசுவதையும், செயற்படுவதையும் நிறுத்த வேண்டும். எங்கள் பிரச்சினைகளுக்கு ஓர் மத்தியஸ்தம் வழங்கும் நாடாக இந்தியாவை நாம் ஏற்படுத்த வேண்டும். வாய்வீச்சாளர்களின் மேடைப் பேச்சுகளுக்கு செவி கொடுத்தால் வழி தவறி, எங்களுக்கு உதவ வேண்டிய நாட்டை பகை நாடாக மாற்றும் சதிச் செயலில் எங்கள் இனம் வீழ்ந்து விடும். இவர்களின் பேச்சினால் நாம் கண்ட பலன் வீழ்ச்சிதான். இவர்களைத் தூண்டிவிட்டு லாபம் அடைந்தது சிங்கள அரசுதான்.
உலகில் வாழும் தமிழர்கள் எங்கள் இனத்தவர் 3 லட்சம் பேரைக் காப்பாற்றவும் மீளக் குடியமர்த்தவும் தயாராக இருக்கின்றனர். அதற்கு இடம் தராத சிங்கள அரசு, புனர்வாழ்வுக்கும், மீளக் குடியமர்வுக்கும் உதவிசெய்யும்படி வெளிநாடுகளைக் கோருகிறது. தமிழர்கள் தங்கள் நாட்டின் பிரஜைகள் என்றும் கதை சொல்லி பெரும் பணம் வசூலிக்க எங்கள் மக்களை முகாம்களில் அடைத்து வைத்து அவர்கள் படும் துன்பங்களை தனக்கு வருவாயாக அறுவடை செய்ய முயற்சித்து வருகிறது.
எங்கள் மக்களையும், நிலப்பகுதிகளையும் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டும். ஐ.நா.வை நம்பியிருந்தால் அது ராஜபக்சவுக்குத்தான் சாதகமாக முடியும்.
இதுதவிர, நாடாளுமன்ற நாற்காலிக்கு அலையும் எந்த நபரும் தமிழ் மக்களுக்கு விடிவைத் தேடித் தரமாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு தமிழ் இனம் ஒன்றுபட்டு தீர்வைக் காண முன்வரவேண்டும். இது சாத்தியமான ஒன்றுதான். ஓன்றுபடுவது மட்டுமல்ல எங்கள் இனத்தை வழிநடத்த புதிய தலைமுறை ஒன்றை நாம் உருவாக்க வேண்டும்.
த. ஐசாத்
அரசியல் பிரிவு
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)
06-06-2009
|