Untitled Document
Warning: preg_match() [function.preg-match]: Unknown modifier 'n' in /home/theepori/public_html/header.php on line 42
Untitled Document
இந்தியா நேரடியாகத் தலையிட்டு ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் - ஈ.என்.டி.எல்.எப். வலியுறுத்தல்!
May 11,2009
  மாண்புமிகு. பாரதப் பிரதம மந்திரி,

   இந்திய மத்திய அரசு,

   புதுடெல்லி.

   இந்தியா நேரடியாகத் தலையிட்டு ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்!

   சிறுக சிறுக அழித்து வந்த சிங்கள அரசு இப்போது தினமும் ஆயிரக்கணக்கில் தமிழர்களைப் படுகொலை செய்கிறது. பயங்கரவாதத்தை ஒடுக்கிறோம், தமிழ் மக்களை மீட்கிறோம் என்று அனைத்து உலக நாடுகளையும் ராஜபக்சேயின் அரசு ஏமாற்றிக் கொண்டு தமிழ் இனத்தை அழித்து ஒடுக்குவதில் முனைப்பாகச் செயல்படுகிறது.

   சிங்கள அரசின் இந்த இன அழிப்பு நடவடிக்கையினைத் தடுத்து நிறுத்தும் உரிமை இந்தயாவுக்கு மட்டுமே உண்டு. இந்தியா இதனை உடனே செய்ய வேண்டும். பிரபாகரன் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் இனம் அழிக்கப்படுவதை நியாயப்படுத்த இயலாது.

   புலிகள் இயக்கம் செய்த தவறுகளுக்கு தமிழ இனம் பொறுப்பேற்க முடியாது. திரு. சிறிசபாரெத்தினம், திரு. அமிர்தலிங்கம், திரு. பத்மநாபா, திரு. இராஜீவ்காந்தி போன்ற தலைவர்களை புலிகள் படுகொலை செய்யும் போது தமிழ் இனத்தை அழைத்து ஆலோசனை பெற்று இந்தத் தலைவர்களைக் கொலை செய்யவில்லை.

   புலிகளின் சர்வாதிகாரக் கொள்கையின் அடிப்படையில்தான் இந்தத் தவறுகளைச் செய்தனர். புலிகளைத் தண்டிப்பதற்கும், அழிப்பதற்கும் காரணங்கள் பல இருக்கின்றன. ஆனால் அவர்களிடத்து அகப்பட்டுக்கொண்டுள்ள மக்களை அழிப்பதற்கு எந்தவித நியாயமும் இல்லை. ராஜபக்சே எந்த நியாயத்தையும் சொல்லவும் முடியாது.

   2000ம் ஆண்டுகால சிங்கள பௌத்த வெறியர்களின் கொள்கையான தமிழ் இன அழிப்பு நடவடிக்கையினைத்தான் இப்போது சிங்கள அரசு செய்து வருகிறது. புலிகள் இயக்கத்தின் தவறுகள் சிங்கள ஆட்சியாளருக்கு சாதகமானதால் அந்தத் தவறுகளைக் காரணம் காட்டியே மொத்த இனத்தையும் அழிக்கிறார் ராஜபக்சே!

   பிரித்தானியர் செய்துவிட்ட மாபெரும் தவறால் எங்கள் இனம் முற்றாக அழிந்துவிடும் நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையைத் தடுக்க இந்தியாவால் மட்டுமே முடியும். தமிழர் உயிரைக் காக்க வேண்டும் என்றால் இந்தியா தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்.

   மக்கள் அழிந்த பின் அரசியல் தீர்வு யாருக்குப் பயன்படும்? மக்களையும் இழந்து, மண்ணையும் இழந்த பின் சம உரிமையுடன் வாழ இந்தியாவால் எதனைச் செய்ய முடியும்? சிங்கள அரசின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைக்கு இந்தியா துணைபோனது என்ற அவப் பெயரைத் தவிர, வேறு ஏதும் மிஞ்சப் போவதில்லை.

   எனவே, மிஞ்சி இருக்கும் தமிழ் இனத்தைக் காக்கவென்றாலும் இந்தியா உடனடியாக ராஜபக்சேயின் அரசைத் தடுத்து தமிழ் இனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) இந்தியாவை வேண்டிக்கொள்கிறது.

   இவ்வண்ணம்,

   ஞா.ஞானசேகரன்

   தலைவர்

   ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

   (ஈ.என்.டி.எல்.எப்.)

   11-05-2009

Back