ஈழத் தமிழர்களின் உரிமைப் பிரச்சனையானது இதுவரை செய்யத்தகாதவற்றினை செய்து வந்ததினாலேயே கெட்டுச் சீரழிந்து வந்தது. இனி வரும் காலங்களில் நாம் செய்ய வேண்டியவற்றினைச் செய்யாதிருந்தாலும் எஞ்சியவையும் கெட்டு சீரழிந்து விடும்.
இலங்கையிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் வெளிவரும் செய்தித்தாள்களும் வானொலிகளும் தொலைக்காட்சிகளும் ஏதோ ஓர் விதத்தில் பக்கச் சார்புடையவையாகவே இருந்து வருகின்றன. சிலர் பொதுவானவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் மறைமுக சார்பு உள்ளவர்களாகவே செயல்படுகின்றனர். எனவே குழப்பங்களுக்கு குறைவே இல்லை. செய்திகளைப் படிப்பவர்களும் பெரும்பாலோர் சார்புடையவர்களாகவே இருக்கின்றனர்.
தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டது போய் இப்போது பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் எந்தவித எதிர்ப்புமின்றி மிகவும் சுலபமாக நிறைவேற்றிவருகிறது.
இப்படியான தமிழர் அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு எல்லா வகையிலும் சாதகமான சூழல் தோன்றியுள்ளதன் காரணங்களை ஆராய்ந்தால் தமிழர்கள் தாங்களே தங்கள் தலையில் மண்னை வாரிப் போட்டதை அறியலாம்.
இவற்றுக்கு தமிழ் தலைவர்களும் தமிழ் மக்களும்தான் காரணம் என்றால் அது மிகையாகாது. பலருக்கும் உண்மை கசக்கும் சிலர் உண்மையை ஏற்க மறுப்பர்.
தமிழீழம் பிரிந்து சின்னாபின்னமானாலும் தமது சுயநலத்துக்காக கண்மூடித்தனமாக முழு இனத்துக்குமே ஆபத்தை ஏற்படுத்துவர். இன்றும் அது நடந்து கொண்டிருக்கிறது.
நாம் பக்கச்சார்பு இல்லாமல் இந்தச் செய்தி இதழை நடத்துவோம் என்று கூறிக்கொள்ளும் வேளையில் கண்டிப்பாக தமிழர் உரிமைகளையும் அதன் விடுதலையையும் சார்ந்தே இருக்கும். உரிமைகளுக்கும் விடுதலைக்கும் தீங்கு செய்வோருக்கு எதிரான கருத்துக்கள் இங்கு வெளியிடப்படும் அதேவேளை இனத்தின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவுமான செய்திகள் முக்கியத்துவப்படுத்தப்படும்.
எங்கள் இனம் பாதுகாக்கப்படுவதும் விடுதலை அடைவதற்குமான கருத்துகள் யாரிடமிருந்து கிடைத்தாலும் அவை பிரசுரிக்கப்படும். எனவே தயக்கமின்றி அவற்றினை எங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.
இது வெறும் பொறிதான் நன்மைக்கும் பயன்படுத்தலாம் தீமைக்கும் பயன்படுத்தலாம். நாங்கள் எம் இனத்தின் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்துவோம்.
நாட்டை பிரிக்கமுடியாது என்று கூறும் சிறிலங்கா அரசு தமிழினத்தையும் தமிழீழத்தையும் பிரித்துத் துண்டாடி தமது இன வெறி வெளிப்பாட்டினை தயக்கமின்றி உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது.
இந்தத் துண்டாடுதல் (வடக்குக் கிழக்கைப் பிரித்தல்) நிகழ்வினை ஈழத் தமிழர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை ஏன்? இந்தக் கேள்விக்கும் பதில் தமிழர்களே என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
தமிழினம் தன்னைத்தானே விமர்சனம் செய்து கொள்ளவேண்டும் அப்போதுதான் உண்மை நிலையை அறிந்து அனைத்தையும் சரிசெய்யலாம்.
இன்றும் காலம் கடந்து போய்விடவில்லை கடந்துவந்த பாதை சரிதானா என்று அனைவரும் ஆராய்ந்தால் தமது தவறுகளை தாமே களையலாம்.
பிறரைக் கைகாட்டவேண்டாம். நாம் சரியானவற்றைச் செய்தால் எங்கள் இனத்தின் அழிவினைத் தடுத்து நிறுத்தலாம்.
நன்றி! |